சேலம் அருகே சோகம்கிணற்றில் தவறி விழுந்து சிறுவன் சாவுகாப்பாற்ற முயன்று கிணற்றுக்குள் குதித்த தாயால் பரபரப்பு

Update: 2023-06-15 19:55 GMT

இரும்பாலை

சேலம் அருகே கிணற்றில் தவறி விழுந்து சிறுவன் இறந்தான். அவனை காப்பாற்ற முயன்று கிணற்றுக்குள் குதித்த தாயால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

3 வயது சிறுவன்

சேலம் இரும்பாலை அருகே திருமலகிரி சங்கரன் வட்டத்தை சேர்ந்தவர் வெங்கடாசலம். கூலி தொழிலாளி. இவருடைய மனைவி ரேவதி, இவர்களுக்கு 3 வயதில் கவினேஸ்வரன் என்ற மகன் உள்பட 2 குழந்தைகள் இருந்தனர், நேற்றுமுன்தினம் வெங்கடாசலம் வேலைக்கு சென்று விட்டார். மூத்த மகன் பள்ளிக்கூடத்துக்கு சென்று விட்டான்.

வீட்டில் ரேவதியும், 2-வது மகன் கவினேஸ்வரனும் இருந்தனர். அப்போது வீட்டுக்கு அருகில் உள்ள தென்னைமரத்தில் கவினேஸ்வரனை வைத்து விட்டு ரேவதி வீட்டுக்குள் சென்றதாக தெரிகிறது. அங்குள்ள கிணற்று அருகில் சிறுவன் விளையாடிக் கொண்டிருந்தான்.

கிணற்றுக்குள் குதித்த தாய்

இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த ரேவதி, சிறுவன் பெயரை கூறி அழைத்துக்கொண்டே ஓடி வந்தார். அதற்குள் சிறுவன் கிணற்றுக்குள் விழுந்து விட்டான். தன் கண்முன்னே கிணற்றுக்குள் மகன் விழுந்ததை கண்டு ரேவதி கதறி அழுதார். சத்தம் போட்டபடியே மகனை காப்பாற்ற ரேவதியும் கிணற்றுக்குள் குதித்தார்.

அவரது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் ஒடி வந்தனர். ரேவதிக்கு நீச்சல் தெரியும் என்பதால் கிணற்றுக்குள் விழுந்த சிறுவனை அவரே மீட்டார்.அக்கம் பக்கத்தில் இருந்து ஓடி வந்தவர்கள் இருவரையும் கிணற்றில் இருந்து வெளியே தூக்கினர்.

சாவு

சிறுவனை அரசு ஆஸ்பத்திரிக்கு தூக்கி சென்றனர். அவனை பரிசோதனை செய்த டாக்டர்கள், ஏற்கனவே சிறுவன் இறந்து விட்டதாக தெரிவித்தனர். தன் கண்முன்னே மகன் இறந்த தகவல் கேட்டு ரேவதி கதறி அழுதார். அவரது அழுகை அங்கிருந்தவர்களை கண்கலங்க செய்தது.

சிறுவன் இறப்பு குறித்து இரும்பாலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். தாய் கண்முன்னே சிறுவன் கிணற்றில் மூழ்கி இறந்த சம்பவம் அந்த பகுதியில் பெருத்த சோகத்தை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்