முட்புதரில் தொழிலாளி பிணம்
மயிலம் அருகே முட்புதரில் தொழிலாளி பிணமாக கிடந்தார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மயிலம்,
மயிலம் அருகே பெரும்பாக்கம் கிராமத்தை சேர்ந்த ரங்கசாமி மகன் சங்கர் (வயது 47). கூலி தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் வீட்டில் இருந்து வெளியே சென்றார். அதன் பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. இதையடுத்து அவரை உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர். இருப்பினும் அவர் கிடைக்கவில்லை. இது குறித்த புகாரின் பேரில் மயிலம் போலீசார் மாயமான சங்கரை தேடிவந்தனர். இந்நிலையில் நேற்று அதே பகுதியில் உள்ள சிவன் கோவில் குளக்கரை அருகில் உள்ள முட்புதரில் சங்கர் பிணமாக கிடந்தார். இது குறித்த தகவலின் பேரில் மயிலம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சங்கரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்த புகாரின் பேரில் சங்கரை யாரேனும் கொலை செய்து முட்புதரில் வீசி விட்டு சென்றார்களா? அல்லது அவர் தற்கொலை செய்து கொண்டாரா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.