குட்டி யானை திடீர் சாவு

செங்கோட்டை அருகே குட்டி யானை திடீரென்று உயிரிழந்தது.

Update: 2023-04-08 21:22 GMT

செங்கோட்டை:

செங்கோட்டை அருகே குட்டி யானை திடீரென்று உயிரிழந்தது.

குட்டி யானை

தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள தமிழக-கேரள எல்லையான அலிமுக்கு- அச்சன்கோவில் சாலையில் வளையம் வனப்பகுதியில் நேற்று முன்தினம் காலையில் காட்டு யானைக்கூட்டம் சுற்றி திரிந்தது. அப்போது யானை கூட்டத்தில் இருந்த 1½ வயது குட்டி யானை திடீரென்று சாலையோரம் மயங்கி விழுந்து இறந்தது.

இதை பார்த்த மற்ற யானைகள் பிளிறின. அந்த வழியாக வாகனங்களில் சென்றவர்கள் அதிர்ச்சி அடைந்து, மண்ணறைப்பாறை வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

உடல் எரிப்பு

உடனே வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். இறந்த குட்டி யானையை சுற்றிலும் மற்ற யானைகள் நின்று கொண்டிருந்தன. நீண்ட நேரத்துக்கு பின்னர் மற்ற யானைகள் வனப்பகுதிக்குள் சென்றதை தொடர்ந்து, இறந்த குட்டி யானையை கோனி உதவி கால்நடை டாக்டர் சந்திரன் தலைமையிலான மருத்துவ குழுவினர் பிரேத பரிசோதனை செய்தனர். பின்னர் குட்டி யானையின் உடலை தீ வைத்து எரித்தனர். பிரேத பரிசோதனை முடிவு வந்தபின்னரே அந்த குட்டி யானை எப்படி இறந்தது? என்று தெரியவரும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.

கோடைக்காலத்தையொட்டி அச்சன்கோவில் பகுதிக்கு அதிக சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். தற்போது அங்கு யானைக்கூட்டம் சுற்றி திரிவதால் சுற்றுலா பயணிகள் வனப்பகுதிக்கு செல்லக்கூடாது என்று கேரள போலீசாரும், வனத்துறையினரும் எச்சரித்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்