சொகுசு காரை திருடி ஊட்டிக்கு சுற்றுலா சென்ற ஆசாமிகள்
நித்திரவிளை அருகே சொகுசு காரை திருடி ஊட்டிக்கு சுற்றுலா சென்ற ஆசாமிகளை போலீசார் துரத்தி சென்று மடக்கி பிடித்தனர்.
கொல்லங்கோடு:
நித்திரவிளை அருகே சொகுசு காரை திருடி ஊட்டிக்கு சுற்றுலா சென்ற ஆசாமிகளை போலீசார் துரத்தி சென்று மடக்கி பிடித்தனர்.
சொகுசு கார் திருட்டு
கேரள மாநிலம் பாறசாலை பகுதியை சேர்ந்தவர் சுஜின் (வயது 33), ஆம்புலன்ஸ் டிரைவர். இவர் கொல்லம் பகுதியை சேர்ந்த ஒருவரிடம் இருந்து சொகுசு கார் ஒன்றை விலைக்கு வாங்கி உள்ளார். இந்த காரை நித்திரவிளை அருகே உள்ள பணமுகம் பகுதியை சேர்ந்த அனில்மோன் என்பவருக்கு சொந்தமான நிலத்தில் நிறுத்துவது வழக்கம்.
இந்தநிலையில் நேற்று முன்தினம் காலை அனில்மோன் காரை எடுப்பதற்கு சென்றார்். அப்போது கார் நிறுத்தி இருந்த இடத்தில் காரை காணவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் இதுகுறித்து நித்திரவிளை போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் விசாரணை நடத்தினர். மேலும் அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். அதில் 4 மர்ம நபர்கள் காரை எடுத்து சென்றது தெரியவந்தது.
சினிமா பட பாணியில்...
இதையடுத்து காரை திருடிய ஆசாமிகளை பிடிக்க போலீசார் விசாரணையை முடுக்கி விட்டனர். தொடா்ந்து அப்பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். அப்போது மங்காடு பாலம் வழியாக காரை ஓட்டிச் சென்ற மர்ம நபர்கள் காப்புக்காடு பகுதியில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையத்தில் பெட்ரோல் போட்டுள்ளனர். பின்னர் காரின் பதிவெண் மற்றும் அடையாளங்களை மாற்றிக்கொண்டு நாகர்கோவில் வழியாக திருநெல்வேலி நோக்கி சென்று கொண்டிருப்பது கண்காணிப்பு காட்சிகள் மூலம் தெரியவந்தது.
அதைத்தொடர்ந்து போலீசார் மர்ம ஆசாமிகளை பின்தொடர்ந்து துரத்தி சென்றனர். ஆரல்வாய்மொழி அருகே மகேந்திரகிரி பகுதியில் ஆசாமிகள் நின்று கொண்டிருந்தனர். அப்போது அவர்களை போலீசார் சுற்றிவளைத்து பிடிக்க முயன்றனர். ஆனால் அவர்கள் காரை எடுத்துக்கொண்டு தப்பிச்செல்ல முயன்றனர். அவர்களை சினிமா பட பாணியில் துரத்தி சென்று மடக்கி பிடித்தனர்.
ஊட்டிக்கு சுற்றுலா
இதற்கிடையே பிடிபட்ட 4 பேரில் ஒருவன் நெஞ்சுவலிப்பதாக கூறினான். உடனே அவனை ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்று பரிசோதனை செய்தனர். ஆனால் அவருக்கு எந்த பாதிப்பும் இல்லை என டாக்டர்கள் தெரிவித்தனர். இதையடுத்து 4 பேரையும் போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில், கேரள மாநிலம் பாறசாலை பகுதியை சேர்ந்த அஜித் (21), சரத் (20), மற்றும் 11-ம் வகுப்பு படிக்கும் 16 வயது சிறுவன், நித்திரவிளை அருகே காஞ்சாம்புறம் பகுதியை சேர்ந்த 11-ம் வகுப்பு படிக்கும் மற்றொரு 16 வயது சிறுவன் என்பதும் தெரியவந்தது.
மேலும் அவர்களிடம் நடத்திய விசாரணையில் ருசிகர தகவலை தெரிவித்தனர். அதாவது காரை திருடிய 4 பேரும் கார் நின்ற பகுதியில் காலை வேளையில் உலா வந்துள்ளனர். அவர்கள் காருக்கு அருகே நின்ற இருசக்கர வாகனத்தை முதலில் திருடிவிட்டு சிறிது தூரம் சென்றுள்ளனர். அப்போது இருசக்கர வாகனத்தில் காரின் சாவி இருந்துள்ளது. இதையடுத்து திரும்பி வந்த அவர்கள் அந்த சாவியை வைத்து காரை இயக்கி பார்த்துள்ளனர். அப்போது கார் இயங்கியதால் காரை திருடி கொண்டு ஊட்டிக்கு சுற்றுலா செல்ல முடிவு செய்தனர். அப்படி சுற்றுலா புறப்பட்டபோது சிக்கியதாக போலீசாரிடம் தெரிவித்தனர்.
சிறையில் அடைப்பு
மேலும் அவர்களிடம் போலீசார் நடத்திய தீவிர விசாரணையில், பாறசாலை பகுதியை சேர்ந்த அஜித்தும், காஞ்சாம்புறம் பகுதியை சேர்ந்த 16 வயது சிறுவனும் சகோதரா்கள் என்பதும், கேரளாவில் ஏற்பட்ட ஒரு அடிதடி வழக்கில் சம்பந்தப்பட்டு போலீசாரிடம் சிக்காமல் இருக்க வேண்டி, காஞ்சாம்புறம் பகுதியில் உள்ள சகோதரன் வீட்டிற்கு வந்த அஜித், செலவிற்கு பணம் தேவை என்பதால் கூட்டுசேர்த்து திருட்டு தொழிலில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து 4 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்த போலீசார் அவர்களை குழித்துறை கோர்ட்டில் ஆஜர்படுத்தி அஜித் மற்றும் சரத்தை பாளையங்கோட்டை சிறையில் அடைத்தனர். 2 சிறுவர்களையும் வள்ளியூரில் உள்ள சிறுவர் சீர்திருத்த பள்ளியில் சோ்த்தனர். கைது செய்யப்பட்ட நபர்களில் ஒருவரான சரத் என்பவருக்கு திருமணமாகி 9 மாத கர்ப்பிணி மனைவி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.