நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வுடன் கூட்டணி தொடரும்-ஜி.கே.வாசன் பேட்டி

வருகிற நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வுடன் கூட்டணி தொடரும் என்று த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் கூறினார்.;

Update:2022-11-20 01:51 IST

தலைவாசல்:

ஜி.கே.வாசன் பேட்டி

தலைவாசலை அடுத்த புளியங்குறிச்சி கிராமத்தில் நடைபெற்ற ஒரு விழாவில் நேற்று மாலை த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் கலந்து கொண்டார். பின்னர் அவர் அங்கு கட்சி கொடியை ஏற்றி வைத்்தார். இதைத்தொடர்ந்து ஜி.கே.வாசன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் கெங்கவல்லி தொகுதியில் பல்வேறு துறைகளில் பல வளர்ச்சி பணிகள் நடைபெற்றன. கெங்கவல்லி தொகுதியின் வளர்ச்சிக்கு அ.தி.மு.க. அடித்தளமிட்டு இருக்கிறது என்பதற்கு மாற்று கருத்து இல்லை. கடந்த ஆட்சியில் கொண்டு வந்த திட்டங்களை தி.மு.க. அரசு முடக்க பார்க்கிறது. மக்களுக்கான ஆட்சி நடைபெறுகிறது என்றால் கடந்த ஆட்சியில் மக்கள் விரும்பும் வகையில் கொண்டு வந்த திட்டங்களை எல்லாம் தொடர்ந்து நிறைவேற்றி தர வேண்டும். கடந்த ஆட்சி திட்டங்களை முடக்க பார்ப்பது ஏற்புடையதல்ல.

கூட்டணி தொடரும்

வருகிற நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வுடன் கூட்டணி தொடரும். அ.தி.மு.க. கூட்டணி மகத்தான வெற்றி பெறும். அதற்கான வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. தி.மு.க.வுக்கு எதிர்மறை வாக்குகள் அதிகரித்து வருகிறது. தி.மு.க. அரசின் செயல்பாடு மக்களுக்கு ஏமாற்றத்தை அளித்து வருகிறது. பிரதமர் மோடி தலைமையில் காசியில் நடைபெற்ற தமிழ் சங்கமம் நிகழ்ச்சி வரலாற்று சிறப்புமிக்க நிகழ்ச்சியாகும். தமிழுக்கும், தமிழர்களுக்கும் பெருமை சேர்க்கும் நிகழ்ச்சியாகும். இதற்காக பிரதமருக்கு பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது த.மா.கா. முன்னாள் எம்.எல்.ஏ. விடியல் சேகர், மாநில நிர்வாகி சுசீந்திரகுமார், மாவட்ட தலைவர்கள் காளிமுத்து, உலக நம்பி, மகளிர் அணி நிர்வாகி சத்யாசண்முகம், அ.தி.மு.க. சேலம் புறநகர் மாவட்ட செயலாளர் இளங்கோவன், நல்லதம்பி எம்.எல்.ஏ. தலைவாசல் ஒன்றிய குழு தலைவர் ராமசாமி மற்றும் பலர் உடனிருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்