தலைமறைவான 4 பேரை உடனே கைது செய்ய வேண்டும்

டிஜிட்டல் காயின் மூலம் பல கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில் தலைமறைவான 4 பேரையும் உடனே கைது செய்ய வேண்டும் என்று பாதிக்கப்பட்டவர்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.

Update: 2022-10-06 19:30 GMT

டிஜிட்டல் காயின் மூலம் பல கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில் தலைமறைவான 4 பேரையும் உடனே கைது செய்ய வேண்டும் என்று பாதிக்கப்பட்டவர்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.

பலகோடி ரூபாய் மோசடி

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் யுனிவர் காயின் என்ற பெயரில் டிஜிட்டல் காயின் நிறுவனம் நடத்தி பல கோடி ரூபாய் மோசடி நடந்தது. இதில் முதலீடு செய்தால் குறைந்த நாட்களில் அதிக லாபம் கிடைக்கும் என கூறி வாடிக்கையாளர்களிடம் பல கோடி ரூபாய் மோசடி செய்யப்பட்டதாக புகார்எழுந்தது.

இதுதொடர்பாக கடந்த மாதம் காவேரிப்பட்டணத்தை அடுத்த வரட்டம்பட்டியை சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் பிரகாஷ் தலைமையில் பலர் கலெக்டர் அலுவலகத்தில் புகார் செய்தனர். இதையடுத்து இந்த புகார் மனு கிருஷ்ணகிரி மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு போலீசுக்கு மாற்றப்பட்டது. அதை தொடர்ந்து குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி, கடந்த செப்டம்பர் மாதம் 18-ந் தேதி ஓசூர், கிருஷ்ணகிரி, மாரண்டஅள்ளி உள்பட 8 இடங்களில் சோதனை நடத்தினார்கள். இதில் ரூ.1 கோடி அளவு சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

2 பேர் கைது

இதுதொடர்பாக பிரகாஷ், சீனிவாசன் ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அருண்குமார், நந்தகுமார், சங்கர், வேலன் ஆகிய 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் பாதிக்கப்பட்ட முன்னாள் ராணுவ வீரர் பிரகாஷ் தலைமையில் பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்தில் மீண்டும் ஒரு புகார் மனுவை கொடுத்தனர். அதில் கடந்த மாதம் நாங்கள் கொடுத்த புகார் தொடர்பாக 6 பேர் மீது குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

அதில் சீனிவாசன், பிரகாஷ் ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் 4 பேரை இதுவரை கைது செய்யவில்லை. தலைமறைவாக உள்ள அவர்களையும் உடனடியாக கைது செய்ய வேண்டும். அதேபோல ஞானசேகர் என்பவரும் இதில் தலைமை இடத்தில் இருந்தவாறு மோசடியை செய்துள்ளார். அவரையும் கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட எங்களுக்கு பணத்தை மீட்டு தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்