தாராபுரத்தில் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடந்த கலந்தாய்வில் கல்லூரியில் சேருவதற்கு தேர்வு செய்யப்பட்ட மாணவர்களுக்கு ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி சான்றிதழ் வழங்கினார்.
அரசு கல்லூரி
தாராபுரம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி தற்காலிகமாக வகுப்புகள் தொடங்குவதற்கு மாணவர்கள் சேர்க்கைக்கு 500 மாணவர்கள் விண்ணப்பித்திருந்தனர். இதையடுத்து மாணவர்களுக்கான கலந்தாய்வு கூட்டம் நேற்று கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. அதில் பி.ஏ. தமிழ் இலக்கியம், பி.ஏ.ஆங்கில இலக்கியம், பி.காம். வணிகவியல், பி.எஸ்சி கணிதம், பி.எஸ்சி வேதியியல் ஆகிய பாடப்பிரிவுகளுக்கு சேர்க்கை நடைபெற்றது. கலந்தாய்வில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவ மாணவிகளுக்கு அமைச்சர் கயல்விழி செல்வராஜ் சான்றிதழ் வழங்கி பேசியதாவது:-
தாராபுரம் பகுதியில் கடந்த 50 ஆண்டுக்கு மேலாக அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி இல்லாமல் இருந்து வந்தது. எனவே தாராபுரம் பகுதியில் அரசு கலை கல்லூரி தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் தரப்பில் வலியுறுத்தினர்.
கடந்த சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. தேர்தல் வாக்குறுதியில் தாராபுரத்தில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி தொடங்கப்படும் என்று உறுதி கூறப்பட்டது. அதன்படி தாராபுரத்தில் கல்லூரி தொடங்க தமிழக அரசு ஆணை பிறப்பித்தது. இதனை தொடர்ந்து கட்டிடம் கட்டுவதற்கு முன்பு தற்காலிகமாக வகுப்புகள் தொடங்க தாராபுரம் அரசு மேல்நிலைப் பள்ளி தேர்வு செய்யப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
மாணவர் சேர்க்கை
இந்த கலந்தாய்வில் தேர்வான மாணவர்களுக்கு கல்லூரியில் சேர்வதற்கான சான்றிதழை அமைச்சர் கயல்விழி வழங்கி பாராட்டினார். இந்த நிகழ்ச்சியில் நகராட்சி தலைவர் கே.பாப்பு கண்ணன், ஊராட்சி ஒன்றிய குழுதலைவர் எஸ்.வி.செந்தில் குமார், நகர செயலாளர் எஸ்.முருகானந்தம், வார்டு கவுன்சிலர்கள் ஹைடெக் அன்பழகன், முகமது யூசுப், மாவட்ட பிரதிநிதி அய்யப்பன், கல்லூரி கமிட்டி தலைவர் தங்கராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
முடிவில் கல்லூரி முதல்வர் புஷ்பலதா நன்றி கூறினார்.