'கலைஞானி' கமல்ஹாசனின் வாழ்த்துக்கு நன்றி - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

கமல்ஹாசனுக்கு கலைஞர் நூற்றாண்டு நினைவு நாணயத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று நேரில் வழங்கினார்.

Update: 2024-08-25 14:27 GMT

சென்னை,

மறைந்த தி.மு.க. தலைவரும், முன்னாள் முதல்-அமைச்சருமான கருணாநிதியின் நூற்றாண்டு நினைவு நாணய வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் கலந்து கொள்ள நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. ஆனால் அவரால் கலந்துகொள்ள முடியவில்லை.

இந்த நிலையில் இன்று கமல்ஹாசன், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்தார். அப்போது கமல்ஹாசனுக்கு கலைஞர் நூற்றாண்டு நினைவு 100 ரூபாய் நாணயத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். மேலும் இந்த சந்திப்பின்போது முதல்-அமைச்சரின் வெளிநாடு பயணத்திற்கு கமல்ஹாசன் தனது வாழ்த்தைத் தெரிவித்துக்கொண்டார்.

இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் கமல்ஹாசன் வெளியிட்ட பதிவில், "நவீனத் தமிழகத்தை நிர்மாணித்தவரும், இந்திய அரசியலில் மாபெரும் சக்தியாக விளங்கியவரும், வாழ்நாள் முழுவதையும் தமிழுக்காகவும், தமிழர் நலன்களுக்காகவும் அர்ப்பணித்த வரலாற்று நாயகருக்கு சிறப்பான முறையில் நூற்றாண்டு விழா நடத்தி, முத்தாய்ப்பாக நாணயம் வெளியாக பெருமுயற்சி எடுத்த நண்பர், தமிழ்நாட்டின் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை இன்று அவரது இல்லத்தில் சந்தித்து பாராட்டு தெரிவித்தேன்" என்று தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் கமல்ஹாசனின் வாழ்த்துக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், "தலைவர் கலைஞரின் நெஞ்சத்தில் தனக்கெனத் தனி இடம்பெற்றவரும் - என் மீது அளவற்ற அன்புகொண்டவருமான அருமை நண்பர் மக்கள் நீதி மய்யம் தலைவர் 'கலைஞானி' கமல்ஹாசனின் வாழ்த்துக்கு நன்றி!" என்று தெரிவித்துள்ளார்.


Tags:    

மேலும் செய்திகள்