திருப்பரங்குன்றம் அருகே தனக்கன்குளம் பகுதி - நான்கு வழிச்சாலையில் தொடர் விபத்துகள்- பாலம் அமைக்க கிராமமக்கள் வலியுறுத்தல்
திருப்பரங்குன்றம் அருகே தனக்கன்குளம் பகுதி நான்கு வழிச்சாலையில் தொடர் விபத்துகள் நடப்பதால் பாலம் அமைக்க கிராமமக்கள் வலியுறுத்தி உள்ளனர்
திருப்பரங்குன்றம் அருகே தனக்கன்குளம் பிரிவில் உள்ள நான்குவழிச்சாலை பகுதியில் தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன. இந்தநிலையில் தனக்கன்குளம், வேடர்புளியங்குளம், சாக்கிலிப்பட்டி, வெள்ளப்பாறைப்பட்டி, சின்ன சாக்கிலிப்பட்டி, தென்பழஞ்சி, வடபழஞ்சி, மாவிலிப்பட்டி உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் மற்றும் விவசாயிகள் வெளியிடங்களுக்கு இருசக்கர வாகனங்களில் நான்குவழிச்சாலையை கடந்து சென்று வருகிறார்கள். நான்கு ரோடுகள் சந்திப்பான இந்த பகுதியில் நான்குவழிச்சாலை அமைக்கும்போதே பொதுமக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு சுரங்கபாதை அமைக்க தவறி விட்டனர்.
வேகத்தடை இல்லை
இதனால் 10 கிராம மக்கள் மட்டுமல்லாது அந்த 10 கிராமத்திற்கும் சென்று வரக்கூடியவர்கள் இடையே நான்குவழிச்சாலையை கடந்து பயணிப்பதில் அச்சம் நிலவுகிறது. ஒவ்வொரு நாளும் குறைந்தது 4, 5 முறையாவது நான்குவழிச்சாலையை கடந்து செல்லவேண்டிய நிலையில் கிராம மக்கள் தங்களது உயிரை பணயம் வைத்து ரோட்டை கடக்கின்றனர்.
இதற்கு காரணம் இந்த பகுதியில் அடிக்கடி விபத்துக்கள் நடந்து உள்ளது. இந்த பகுதியில் ஆண்டுக்கு ஆண்டு விபத்துகளில் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே போகிறது. இந்த நிலையிலும் "விபத்துப் பகுதி" என்று எச்சரிக்கை அறிவிப்பு பலகை இதுவரை வைக்கப்படாத நிலையே நீடிக்கிறது. உரிய இடத்தில் வேகத்தை கட்டுப்படுத்த வேகத்தடை இல்லை. உயர்கோபுர மின்விளக்கு வசதி இல்லாத குறை இருந்து வருகிறது. இதை தெரிந்தும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கண்டு கொள்வதாக தெரியவில்லை
கிராமசபை கூட்டத்தில் தீர்மானம்
இதுதொடர்பாக தனக்கன்குளம் ஊராட்சி தலைவர் ஆனந்தி பாண்டிமோகன்: நான்குவழிசாலையில் தனக்கன்குளம் சந்திப்பில் விபத்தை தடுப்பதற்காக பாலம் அல்லது சுரங்கபாதை அமைக்க வேண்டும் என்று மனு கொடுத்து வலியுறுத்தப்பட்டுள்ளது. கிராமசபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டும் தேசிய நெடுஞ்சாலைத்துறை உயர் அதிகாரிகளுக்கும், மத்திய அரசின்கவனத்திற்கும் கொண்டு செல்லப்பட்டுள்ளது.
வேடர்புளியங்குளம் ஊராட்சி தலைவர் கண்ணன் கூறும்போது, வேடர் புளியங்குளம், சாக்கிலிப்பட்டி, தென்பழஞ்சி, வட பழஞ்சி, சின்ன சாக்கிலிபட்டி, வெள்ளப்பாறைப்பட்டி, மாவிலிப்பட்டி கிராம மக்கள், விவசாயிகள் மற்றும் மாணவ -மாணவிகள் தங்களது ஊரிலிருந்து நிம்மதியாக சென்று வருவதற்கும், விபத்தை தடுப்பதற்கும் தனக்கன்குளம் பிரிவில் நான்கு வழிச்சாலையில் பாலம் அவசியம். அதை போர்கால அடிப்படையில் அமைப்பதற்கு தேசிய நெடுஞ்சாலைத்துறை முன்வர வேண்டும்.
சாக்கிலிப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் தங்கமாயன்: விருதுநகர்-சமயநல்லூர் நான்கு வழிச்சாலை அமைக்கும் போதே சுரங்கப்பாதை அமைக்காமல் விட்டதால் பல உயிர்களை இழந்து இருப்பது வருத்தமாக உள்ளது. இனியும் விபத்தால் உயிர்பலி ஆகக்கூடாது. அதற்கு பாலம் கட்டுவது தான் நல்லது.
தனக்கன்குளம் பிரிவில் நான்குவழிச்சாலையில் விபத்தால் உயிர்பலி என்ற செய்தி கேட்டாலே மனம் பதறுகிறது. வடபழஞ்சி ஊராட்சிக்கு உட்பட்ட பெரும்பாலான விவசாயிகள் தினமும் தங்கள் தோட்டங்களில் இருந்து காய், கனிகளை பறித்து அதை விற்பனை செய்வதற்காக நான்குவழிச்சாலையை கடந்து மார்க்கெட்டுக்கு சென்று வருவதில் மிகவும் சிரமப்படுகிறார்கள். எனவே பாலம் கட்டுவதற்கு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
4 ஆண்டுகளுக்கு முன்பு
சமூக ஆர்வலர் ஜெகநேசன்: தேசிய நெடுஞ்சாலைத்துறையின் திட்ட அலுவலரை நேரடியாகவும், கடிதம் மூலமாகவும் வலியுறுத்தப்பட்டுள்ளது. அதற்கு உரிய நடவடிக்கை எடுப்பதாகவும், பரிசீலனை செய்யப்பட்டு வருவதாகவும் கடிதம் மூலம் தகவல் தெரிவித்தனர். அதேசமயம் உயிர்பலி தொடர்ந்து வரும் நிலையில் 4 ஆண்டுகளுக்கு மேலாகியும் உரிய நடவடிக்கை எடுக்கப்படாதது வருத்தமளிக்கிறது.
வேடர்புளியங்குளம் ஊராட்சி வி.பி.சிந்தன்நகர் குடியிருப்போர் நலச்சங்கத்தினர் மாணிக்கம் தாகூர் எம்.பி.யிடம் இதுதொடர்பாக மனு கொடுத்தனர். ஆனால் பாலம் அமைக்கப்படவில்லை.
2016-ம் ஆண்டில் சங்கிலி தொடர் போல அடுத்தடுத்து ஒரே மாதத்தில் 20-க்கும் மேற்பட்ட விபத்துக்கள் நடந்தது. 2016-ம் ஆண்டில் ஆகஸ்டு மாதம் மோட்டார் சைக்கிள் மீது கார் மோதியதில் ஓய்வு பெற்ற சப்-இன்ஸ்பெக்டர் அவரது மனைவியுடன் பலியானார். இதனையொட்டி பாலம் அமைக்க வலியுறுத்தி கிராமமக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.