தான செட்டில்மெண்ட்டை ரத்து செய்ய வேண்டும்

மகள்கள், மகனுக்கு எழுதி கொடுத்த தான செட்டில்மெண்டடை ரத்து செய்ய வேண்டும் என்று குறைதீர்வு கூட்டத்தில் மூதாட்டி மனு அளித்தார்.

Update: 2023-09-25 17:14 GMT

மகள்கள், மகனுக்கு எழுதி கொடுத்த தான செட்டில்மெண்டடை ரத்து செய்ய வேண்டும் என்று குறைதீர்வு கூட்டத்தில் மூதாட்டி மனு அளித்தார்.

மக்கள் குறைதீர்வு கூட்டம்

திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் நடைபெற்றது. கலெக்டர் முருகேஷ் தலைமை தாங்கினார். இதில் கல்வி உதவித்தொகை, வீட்டுமனை பட்டா, வேலைவாய்ப்பு, முதியோர் உதவித் தொகை, மாற்றுத் திறனாளிகள் உதவித்தொகை, மாற்றுத் திறனாளிகள் உபகரணங்கள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 500-க்கும் மேற்பட்டோர் மனு அளித்தனர்.

பொதுமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடம் இருந்து பெறப்பட்ட மனுக்களை கலெக்டர் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி அதன் மீது நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டார்.

மேலும் கடந்த வாரங்களில் பெறப்பட்ட கோரிக்கை மனுக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் அவர் அதிகாரிகளிடம் ஆய்வு மேற்கொண்டார். குறைதீர்வு கூட்டத்தில் அனைத்து துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

மூதாட்டி புகார் மனு

திருவண்ணாமலை அருகில் உள்ள கிராமத்தை சேர்ந்த அலமேலு (வயது 75) என்ற மூதாட்டி அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-

எனக்கு 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். அவர்கள் திருமணமாகி நல்ல நிலையில் உள்ளனர். இந்த நிலையில் எனக்கு சாப்பாடு போடுவார்கள், துணிகள் எடுத்து கொடுத்து நல்ல நிலையில் வைத்திருப்பார்கள் என்று நினைத்து அவர்கள் கேட்டதன் பேரில் எனக்கு சொந்தமான இடத்தை 2021-ல் தானசெட்டில்மெண்ட் எழுதி வைத்தேன்.

சில மாதங்கள் சாப்பாடு போட்டு துணி எடுத்து கொடுத்தனர். தற்போது சாப்பாடு போடுவதில்லை. துணி எடுத்து தருவதும் இல்லை. வீட்டில் சேர்க்க மறுக்கின்றனர்.

இதனால் மனம் உடைந்து அருணாசலேஸ்வரர் கோவிலில் யாசகம் எடுத்து பிழைத்து வருகிறேன். எனவே அந்த தானசெட்டில் மெண்ட்டை ரத்து செய்ய வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்