தாம்பரம் ஜி.எஸ்.டி.சாலையில் பரபரப்பு: அடுத்தடுத்து 3 வாகனங்கள் மோதல் - விபத்துக்கு காரணமான கார் தீப்பிடித்து எரிந்தது

தாம்பரம் ஜி.எஸ்.டி.சாலையில் அடுத்தடுத்து 3 வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளானது. இதில் விபத்தை ஏற்படுத்திய கார் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2023-02-07 08:45 GMT

சென்னை அடுத்த குரோம்பேட்டை பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீதர் வயது (39). தனியார் நிறுவன ஊழியரான இவர், விருதுநகர் மாவட்டம் சிவகாசிக்கு மனைவி, குழந்தையுடன் சென்று விட்டு நேற்று காலை 10 மணியளவில் ஜி.எஸ்.டி.சாலையில் காரில் குரோம்பேட்டை நோக்கி வந்து கொண்டிருந்தார். அப்போது, தாம்பரம் ஜி.எஸ்.டி. சாலையில் அமைந்துள்ள காந்தி சாலை சந்திப்பில் வேகமாக காரை ஓட்டி வந்த போது, ஸ்ரீதர் கவனக்குறைவாக முன்னால் சிக்னலுக்காக நின்று கொண்டிருந்த மற்றொரு கார் மீது பயங்கரமாக மோதினார்.

இதனால் சிக்னலுக்கு நின்ற கார், அதற்கு முன்னால் நின்று கொண்டிருந்த சினிமா நிறுவனத்திற்கு சொந்தமான வாகனம் மீது அடுத்தடுத்து மோதியது. அடுத்தடுத்து 3 வாகனங்கள் மோதி விபத்தில் சிக்கியதால் ஜி.எஸ்.டி.சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இதைக்கண்ட போக்குவரத்து போலீசார் விரைந்து வந்து விபத்தில் சிக்கிய வாகனங்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இதற்கிடையே ஸ்ரீதர் ஓட்டி வந்த காரின் முன்பகுதி திடீரென தீப்பிடித்து எரிய தொடங்கியது. விபத்து காரணமாக முன்னதாகவே ஸ்ரீதர் குடும்பத்தினர் காரில் இருந்து கீழே இறங்கி சாலையில் நின்றதால் உயிரிழப்பு தவிர்க்கப்பட்டது. இதையடுத்து போலீசார் அந்த பகுதியாக சென்ற தண்ணீர் லாரியை மடக்கி அவசர தேவையாக காரின் முன்பகுதியில் ஏற்பட்ட தீயை தண்ணீரை பீய்ச்சியடித்து அணைத்தனர். இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இந்த விபத்து காரணமாக தாம்பரம்-குரோம்பேட்டை ஜி.எஸ்.டி. சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இந்த விபத்து தொடர்பாக குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்