தைப்பூச திருவிழா: பழனி கோவிலுக்கு வரும் பாதயாத்திரை பக்தர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு

பழனி முருகன் கோவிலில் தைப்பூச திருவிழா கடந்த 29-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

Update: 2023-02-02 06:05 GMT

கோப்புப்படம் 

பழனி,

பழனியில், முருகப்பெருமானின் 3-ம் படைவீடு அமைந்துள்ளது. இங்கு தைப்பூசம், பங்குனி உத்திரம் உள்ளிட்ட திருவிழாக்கள் ஆண்டுதோறும் வெகுவிமரிசையாக கொண்டாடப்படுகிறது. இந்த திருவிழாக்களின்போது லட்சக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாக வந்து முருகப்பெருமானை வேண்டி செல்கின்றனர். அதேபோல் ஏரளாளமான பக்தர்கள் காவடி எடுத்தும், அலகு குத்தியும் வந்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.

இந்நிலையில் பழனி முருகன் கோவிலில் கடந்த 27-ந் தேதி கும்பாபிஷேகம் நடைபெற்றது. அப்போது பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்தனர். அதைத்தொடர்ந்து 29-ந்தேதி தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. 10 நாட்கள் நடைபெறும் விழாவில் தினமும் மாலையில் முத்துக்குமாரசுவாமி வள்ளி-தெய்வானையுடன் வெள்ளி ஆட்டுக்கிடா, வெள்ளி காமதேனு, வெள்ளி யானை, பெரிய தங்கமயில் வாகனம் மற்றும் தங்கக்குதிரை வாகனத்தில் வீதி உலா வருகிறார்.

தைப்பூச திருவிழாவை முன்னிட்டு ஒரு மாதத்துக்கு முன்பே பழனிக்கு பாதயாத்திரை பக்தர்கள் வருவது வழக்கம். அதன்படி கடந்த ஜனவரி மாத தொடக்கத்திலேயே பாதயாத்திரையாக பக்தர்கள் பழனிக்கு வர தொடங்கினர். இந்நிலையில் நாளை மறுநாள் (சனிக்கிழமை) தைப்பூசம் என்பதால் அன்றைய தினம் முருகப்பெருமானை தரிசிக்க பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பழனி நோக்கி பாதயாத்திரையாக வந்த வண்ணம் உள்ளனர்.

தைப்பூச திருவிழாவின் திருக்கல்யாணம், தேரோட்டம் நடைபெறும் நாளில் பக்தர்கள் வருகை லட்சக்கணக்கில் இருக்கும். எனவே போலீஸ் சார்பில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்ற வருகிறது. கும்பாபிஷேகத்துக்கு செய்தது போலவே பாதுகாப்பு, அடிப்படை வசதிகள் உள்ளிட்டவை முழுவீச்சில் நடைபெற்று வருகிறது எனவும், பாதுகாப்பு பணியில் சுமார் 2 ஆயிரம் போலீசார் ஈடுபட உள்ளதாகவும் போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

 

Tags:    

மேலும் செய்திகள்