கோவில்களில் தைப்பூச விழா ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்

தைப்பூச விழாவை முன்னிட்டு கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Update: 2023-02-05 18:45 GMT

விழுப்புரம் காகுப்பம் எம்.ஜி.ஆர். நகரில் உள்ள பாலமுருகன் கோவிலில் நேற்று தைப்பூச விழா நடைபெற்றது. இதையொட்டி காலையில் பாலமுருகனுக்கு பால், தயிர், இளநீர் உள்ளிட்ட பல்வேறு விதமான பொருட்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து பாலமுருகன், சந்தனகாப்பு அலங்காரத்தில் அருள்பாலிக்க மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

இதேபோல் விழுப்புரம் நான்கு முனை சந்திப்பு சாலையில் உள்ள பாலமுருகன் கோவிலில் நேற்று தைப்பூசத்தையொட்டி சாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது. பின்னா் சாமிக்கு வெள்ளிக்கவசம் அணிவிக்கப்பட்டு, மகாதீபாராதனை நடைபெற்றது.

சென்னகுணம்

விழுப்புரம் அருகே சென்னகுணத்தில் உள்ள சிவசுப்பிரமணிய சாமி கோவிலில் தைப்பூசத்தையொட்டி அதிகாலை 5 மணிக்கு விநாயகர் பூஜை, 5.30 மணிக்கு மகா அபிஷேகம், 8 மணிக்கு பம்பாநதி திருமஞ்சனம், 9 மணிக்கு திருக்குளம் செல்லுதல், மதியம் 12 மணிக்கு காவடிகளுக்கு அபிஷேகம், 1 மணிக்கு வேல் அணிதலும், 2 மணிக்கு அக்னி பிரவேசமும், மாலை 3 மணிக்கு சாமி, பூத வாகனத்தில் வீதிஉலாவும் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

சந்தன காப்பு அலங்காரம்

விழுப்புரம் பூந்தோட்டம் முத்துமாரியம்மன் கோவிலில் உள்ள பாலசுப்பிரமணிய சாமிக்கு நேற்று தைப்பூசத்தையொட்டி சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது. பின்னர் மதியம் 12 மணிக்கு சந்தனகாப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

விழுப்புரம் ஆதிவாலீஸ்வரர் கோவிலில் உள்ள பாலமுருகன், முத்தாம்பாளையம் முருகன், முண்டியம்பாக்கம் முருகன் உள்பட பல்வேறு முருகன் கோவில்களில் நேற்று தைப்பூசத்தையொட்டி சிறப்பு பூஜை நடைபெற்றது.

அய்யனாராப்பன் கோவில்

விழுப்புரம் காகுப்பம் அரிகர புத்திர அய்யனாரப்பன் கோவிலில் நேற்று தைப்பூச விழா நடைபெற்றது. இதையொட்டி பூரணி புஸ்கலை சமேத அரிகர புத்திர அய்யனாரப்பனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் அய்யனாரப்பன் சந்தன காப்பு அலங்காரத்தில் அருள்பாலிக்க மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

குறிஞ்சிப்பை

செஞ்சி வட்டம் குறிஞ்சிப்பை கிராமத்தில் உள்ள சிவசுப்பிரமணியசாமி கோவிலில் 68-ம் ஆண்டு தைப்பூச திருவிழா நேற்று நடைபெற்றது. இதையொட்டி மாரியம்மன், விநாயகர் மற்றும் முருகனுக்கு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. தொடர்ந்து காலை 10 மணிக்கு மேல் பக்தர்களுக்கு வேல் குத்துதல், சூழல் கரகவேல், கடப்பாரை உறுவுதல், மழுவு ஏந்துதல், செடல் சுத்துதல், முதுகில் கொக்கி போட்டு ராட்டினம் சுற்றுதல், முதுகில் கொக்கி போட்டு தேர் இழுத்தல், உருளை இழுத்தல், டிராக்டர் இழுத்தல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றது. தொடர்ந்து சாமி வீதி உலாவும் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் கிராமமக்கள் செய்திருந்தனர்.

தேவதானம்பேட்டை

செஞ்சியை அடுத்த தேவதானம்பேட்டையில் உள்ள தண்டாயுதபாணிசாமி கோவிலில் தைப்பூச திருவிழா கடந்த மாதம் 26-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து தினசரி சாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது. விழாவில் நேற்று தைப்பூச திருவிழா நடைபெற்றது. இதையொட்டி காலை 8 மணிக்கு தண்டாயுதபாணிசாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் சாமிக்கு வௌ்ளிக்கவசம் அலங்காரம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து காவடிகள் பூஜை, சாமி வீதிஉலாவும் நடைபெற்றது. பின்னர் அருட்பெருஞ்ஜோதி சாமிகள் மார்பு மீது மாவு இடித்தல் மற்றும் மிளகாய் பொடி அபிஷேகம், செடல் சுற்றுதல், தீமிதித்தல், தேர் வீதிஉலா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இரவு சாமி வீதி உலா நடைபெற்றது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை விழா குழுவினர் மற்றும் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.

முண்டியம்பாக்கம்

விக்கிரவாண்டி அடுத்த முண்டியம்பாக்கம் வள்ளி, தெய்வானை சமேத பழனி ஆண்டவர் கோவிலில் தைப்பூச விழா நேற்று காலை அய்யனார் கோவிலில் கோபூஜையுடன் தொடங்கியது. தொடர்ந்து பக்தர்கள் 207 பால் குடங்களை எடுத்து வந்தனர். தொடர்ந்து சாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது. தொடர்ந்து பக்தர்கள் அலகு குத்தியும், காவடி எடுத்தும், தீ மிதித்தும் நேர்த்திக்கடன் செலுத்தினர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கிராம மக்கள் செய்திருந்தனர்.

பிரம்மதேசம்

பிரம்மதேசம் அருகே உள்ள சிறுவாடி கிராமத்தில் பிரசித்தி பெற்ற பாலமுருகன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் தைப்பூச விழா கடந்த 30-ந் தேதி காப்பு கட்டுதல் மற்றும் கொடி ஏற்றத்துடன் தொடங்கியது. அதனை தொடர்ந்து தினந்தோறும் சாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது, விழாவின் சிகர நிகழ்ச்சியான நேற்று தைப்பூச விழாவையொட்டி சாமிக்கு பால், தயிர், இளநீர், பன்னீர், தேன் உள்பட பல்வேறு வகையான பொருட்களை கொண்டு அபிஷேகம் நடத்தப்பட்டது. பின்னர் சிறப்பு பூஜை செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதையடுத்து செடல் திருவிழா நடைபெற்றது, இதில் பக்தர்கள் தங்களது உடலில் அலகு குத்தியும், பறக்கும் காவடி எடுத்தும், டிராக்டர், கிரேன் போன்ற ராட்சத எந்திரங்களை இழுத்தும் கிராமத்தின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக கோவிலுக்கு வந்து நேர்த்திக்கடனை செலுத்தினர். பின்னர் நடைபெற்ற தீமிதி திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தீ மிதித்தனர். தொடர்ந்து இரவில் திருக்கல்யாண உற்சவம் நடந்தது. விழாவில் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் சிறுவாடி கிராம மக்கள் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்