தேசிய பெடரேஷன் வாள் சண்டை போட்டிக்கு தா.பழூர் மாணவி தேர்வு
தேசிய பெடரேஷன் வாள் சண்டை போட்டிக்கு தா.பழூர் மாணவி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
அரியலூர் மாவட்டம், தா.பழூர் அருகே உள்ள உதயநத்தம் ஊராட்சியை சேர்ந்த தினக்குடி கிராமத்தில் வசித்து வருபவர்கள் ராமு-லட்சுமி தம்பதியர். இவர்களது மகள் லக்ஷனாதேவி. இவர் அணைக்கரை அரசு மேல்நிலைப்பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறார். லக்ஷனாதேவிக்கு விளையாட்டுகளில் அதிக ஆர்வம் உள்ளதாக கூறப்படுகிறது. இவர் யோகா, கராத்தே, ஜூடோ, சிலம்பம் உள்ளிட்ட தற்காப்பு கலைகள் கற்பதோடு பேட்மிண்டன் விளையாட்டிலும் ஆர்வம் காட்டி வருகிறார். இந்நிலையில் தமிழர்களின் பாரம்பரிய தற்காப்பு கலையில் ஒன்றான உறை வாள் சண்டை கலையிலும் அதிக ஈடுபாடு இருந்ததாக கூறப்படுகிறது. இவருக்கு கராத்தே மற்றும் சிலம்பம் கற்றுக் கொடுக்கும் பயிற்சியாளரிடமே ஸ்கொய் என்று அழைக்கப்படும் உறை வாள் சண்டை கலையையும் கற்று வந்துள்ளார். இதில் நல்ல அளவில் தேர்ச்சி பெற்று கும்பகோணத்தில் மாநில அளவில் நடைபெற்ற பெடரேஷன் போட்டிகளில் கடந்த 3-ந் தேதி வெற்றி பெற்று தேசிய போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்த போட்டியில் தமிழ்நாடு அளவில் 22 மாவட்டங்களை சேர்ந்த போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். தற்போது வருகிற 30-ந் தேதி ஜம்முகாஷ்மீர் மாநிலத்தில் தேசிய அளவிலான பெடரேஷன் போட்டியில் கலந்து கொள்வதற்கு தகுதி பெற்றுள்ள லக்ஷனா தேவி வருகிற 27-ந் தேதி சென்னையில் இருந்து ெரயில் மூலமாக செல்ல திட்டமிட்டுள்ளார். ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்த லக்ஷனாதேவிக்கு பயண செலவுக்கு தேவையான வசதி வாய்ப்புகள் இல்லாததால் தேசிய போட்டியில் கலந்து கொள்ள அவரை அனுப்பி வைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இவருக்கு அரசு உதவ வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.