பல்லடம்
பல்லடம், பொங்கலூர், குண்டடம் ஒன்றிய பகுதியில் தமிழக அரசின் மானியத்துடன் கூடிய சிறு, குறு ஜவுளி பூங்கா அமைத்தல் பற்றிய விளக்க கூட்டம் பல்லடம் அருகே தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. திருப்பூர், கோவை மாவட்ட ஜவுளி உற்பத்தியாளர்கள் சங்க கவுரவ தலைவர் முருகேஷ் தலைமை தாங்கினார். இந்திய விசைத்தறி ஜவுளி ஏற்றுமதி கவுன்சில் துணைத்தலைவர் கரைப்புதூர் சக்திவேல் முன்னிலை வகித்தார். சங்க செயலாளர் ஜெமினி சண்முகம் வரவேற்றார். கூட்டத்தில் திருப்பூர் மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் ராமலிங்கம், துணி நூல் துறை மண்டல துணை இயக்குநர் ராகவன், அலுவலர் கார்த்திக், மற்றும் விசைத்தறி ஜவுளி உற்பத்தியாளர்கள் கலந்து கொண்டனர். பல்லடம், பொங்கலூர், குண்டடம் ஒன்றிய பகுதிகளில், தமிழக அரசின் மானியத்துடன் கூடிய சிறு, குறு ஜவுளி பூங்கா அமைத்தல் குறித்து விளக்கப்பட்டது.
இது குறித்து மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் ராமலிங்கம் நிருபர்களிடம் கூறுகையில். தமிழகத்தில் ஜவுளி உற்பத்தி தொழிலை மேம்படுத்த தமிழக அரசு மானியத்துடன் கூடிய பல்வேறு புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் பல்லடம், பொங்கலூர், குண்டடம் ஒன்றிய பகுதி தொழில் துறையில் பின்தங்கிய பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பின்தங்கிய பகுதியில் தொழில் தொடங்கினால் எந்திரம் கொள்முதல் செய்ய 25 சதவீதம் மானியமும் அதிகபட்சமாக ரூ.1கோடியே 50 லட்சமும் மானியமும் வழங்கப்படுகிறது.
இந்தபகுதிகளில், சிறு, குறு ஜவுளி பூங்காக்கள் தொடங்க அரசு 50 சதவீதம் மானியமும், அதிகபட்சமாக ரூ.2கோடியே 50 லட்சமும் மானியமாக அளிக்கிறது. இந்த திட்டத்தின் கீழ் தொழில் தொடங்க 2 ஏக்கர் நிலம் வேண்டும். அதில் மூன்று நிறுவனங்கள் தொழிலகம் ஏற்படுத்தலாம். இதன் மூலம் ஏராளமான தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைப்பதோடு, குறைந்த செலவில் துணிகளை உற்பத்தி செய்து, வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதோடு வெளி நாடுகளுடன் தொழில் ரீதியாக போட்டியிட்டு, துணி ரகங்களை சந்தைப்படுத்த முடியும். இதன் மூலம் விசைத்தறி ஜவுளி உற்பத்தி தொழில் துறை மேம்பாடு அடையும்..
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
----------------