110 கிலோ மீட்டர் வேகத்தில் ரெயிலை இயக்கி சோதனை ஓட்டம்
பொள்ளாச்சி-போத்தனூர் இடையே 110 கிலோ மீட்டர் வேகத்தில் ரெயிலை இயக்கி அதிவேக சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது.;
திண்டுக்கல்லில் இருந்து பொள்ளாச்சி வழியாக போத்தனூர் வரை மீட்டர் கேஜ் ரெயில் பாதை, அகல ரெயில் பாதையாக மாற்றப்பட்டு ரெயில் போக்குவரத்து நடைபெற்று வருகிறது. இதற்கிடையில் இந்த வழித்தடம் தற்போது மின் மயமாக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பொள்ளாச்சி-போத்தனூர் வழித்தடத்தில் நெல்லை-மேட்டுப்பாளையம், மதுரை-கோவை, பொள்ளாச்சி-கோவை ஆகிய ரெயில்களும், சரக்கு ரெயில்களும் இயக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் பொள்ளாச்சி-போத்தனூா வழித்தடத்தில் இயக்கப்படும் ரெயில்களின் வேகத்தை அதிகரிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு வருகிறது. இதற்கிடையில் திண்டுக்கல்-பொள்ளாச்சி, பொள்ளாச்சி-போத்தனூர் வழித்தடத்தில் நேற்று ரெயில் அதிவேக சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. இதற்காக திண்டுக்கல்லில் இருந்து காலை 7.30 மணிக்கு புறப்பட்ட ரெயில், பொள்ளாச்சிக்கு காலை 9 மணிக்கு வந்தடைந்தது.
பின்னர் பொள்ளாச்சியில் இருந்து போத்தனூர் நோக்கி 9.45 மணிக்கு புறப்பட்ட ரெயில், போத்தனூருக்கு காலை 10.16 மணிக்கு சென்று அடைந்தது. இந்த ரெயில் 110 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கி சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. அப்போது தண்டவாளத்தின் உறுதி தன்மை, அதிர்வுகள் குறித்த பல்வேறு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. ரெயிலின் வேகம் அதிகரிக்கப்பட்டால், இந்த வழித்தடத்தில் கூடுதலாக ரெயில்களை இயக்க வாய்ப்பு உள்ளது. இதுகுறித்து ரெயில்வே அதிகாரிகள் கூறியதாவது:-
பொள்ளாச்சி-போத்தனூர் வழித்தடத்தில் இயக்கப்படும் ரெயில்கள் சராசரியாக 80 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கப்பட்டு வருகின்றன. தற்போது ரெயில்களின் வேகத்தை அதிகரிப்பதற்கு அதிவேக சோதனை ஓட்டம் நடத்தப்பட்டு உள்ளது. அதன்படி 110 கிலோ மீட்டர் வேகத்தில் ரெயிலை இயக்கி சோதனை செய்யப்பட்டது. இதுகுறித்த அறிக்கை ரெயில்வே உயர் அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்படும். அதன்பிறகு ரெயிலின் வேகத்தை அதிகரிப்பது குறித்து அறிவிக்கப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.