திருத்தணியில் பயங்கரம்; போலீஸ்காரர் உள்பட 5 பேரை வெட்டி வழிப்பறி - 4 பேர் கைது

திருத்தணியில் போலீஸ்காரர் உள்பட 5 பேரை வெட்டி பணம்- செல்போன்களை வழிப்பறி செய்த 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தலைமறைவான 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

Update: 2023-09-15 08:58 GMT

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி மேல்ரோடு பகுதியில் சிக்கன் கடை நடத்தி வருபவர் ஜாபர் அலி. இவர் நேற்று முன்தினம் இரவு வியாபாரம் முடிந்து வீட்டிற்கு செல்வதற்காக கடையை மூடிக் கொண்டிருந்தபோது, அங்கு பட்டாகத்தியுடன் வந்த வாலிபர்கள் 2 பேர் ஜாபர் அலியை வெட்டிக் கொலை செய்ய முயற்சி செய்தனர். அவர்களிடமிருந்து வெட்டு காயங்களுடன் ஜாபர் அலி தப்பி ஓடிவிட்டார்.

பின்னர் அந்த வாலிபர்கள் தனது நண்பர்கள் 4 பேருடன் சேர்ந்து கொண்டு திருத்தணி நகரின் முக்கிய வீதிகளை பட்டாக்கத்தியுடன் சுற்றினர்.

அந்த நேரத்தில் கடம்பத்தூர் போலீஸ் நிலையத்தில் பணி புரியும் திருத்தணியை சேர்ந்த போலீஸ்காரர் சுரேந்தர் வேலை முடிந்து வீட்டுக்கு சாதாரண உடையில் அக்கயாநாயுடு தெரு வழியாக நடந்து வந்தார். கஞ்சா போதையில் இருந்த 6 வாலிபர்கள், போலீஸ்காரர் சுரேந்தரை வழிமறித்தனர். போலீஸ்காரர் என்ன செய்வது என திகைத்து நின்ற நேரத்தில் அவரை சுற்றி வளைத்து பட்டா கத்தியால் கையில் வெட்டி அவரிடம் இருந்து ரூ.15 ஆயிரத்தை கொள்ளையடித்தனர்.

இதேபோல் காந்தி ரோடு பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்த பழனி, வங்கனூர் பகுதியைச் சேர்ந்த வஜ்ரவேல், சேகர் வர்மா நகர் தினேஷ் ஆகியோரை இந்த கும்பல் பட்டா கத்தியால் வெட்டி அவர்களிடம் இருந்து செல்போன்களை பறித்தனர். இதில் படுகாயமடைந்த போலீஸ்காரர் சுரேந்தர், சிக்கன் கடைக்காரர் ஜாபர் அலி, பழனி, வஜ்ரவேல், தினேஷ் ஆகிய 5 பேரும் திருத்தணி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இது குறித்து திருத்தணி போலீஸ் நிலையத்திற்கு போலீஸ்காரர் சுரேந்தர் தகவல் தெரிவித்தார். இதனையடுத்து துணை போலீஸ் சூப்பிரண்டு விக்னேஷ் தலைமையிலான போலீசார் பொதுமக்களை கத்தியால் வெட்டி கொள்ளையில் ஈடுபட்ட பி.ஆர்.பள்ளியை சேர்ந்த ஷியாம்சுந்தர் (23), ஜோதி நகரைச் சேர்ந்த சஞ்சய் குமார் (23), சேகர்வர்மா நகரை சேர்ந்த கிஷோர் (24), நரசிம்ம சாமி கோவில் தெருவை சேர்ந்த சதீஷ் (23) ஆகிய 4 பேரை கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து 10 பட்டா கத்தி, செல்போன்கள், ரூ.15 ஆயிரம் மற்றும் மோட்டார் சைக்கிளை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள திருத்தணியை சேர்ந்த சந்துரு (23), ராஜேந்திர பிரசாத் என்கிற வண்டு (20) ஆக இருவரையும் தீவிரமாக தேடி வருகின்றனர். கைது செய்யப்பட்டுள்ள சஞ்சய் குமார் மீது திருத்தணி போலீஸ் நிலையத்தில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து துணை போலீஸ் சூப்பிரண்டு தெரிவிக்கையில், 'தலைமறைவாக உள்ள முக்கிய குற்றவாளியான சந்துரு 5 ஆண்டுகளுக்கு முன்பு ஜாபர் அலி கடையில் தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது ஜாபர் அலி சந்துருவை அடித்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று போதையில் இருந்த சந்துரு தனது நண்பர்களுடன் சேர்ந்து ஜாபர் அலியை கொலை செய்ய முயற்சி செய்து உள்ளார். ஜாபர் அலி தப்பித்து ஓடிவிட்டதால், விரக்தியில் கஞ்சா போதையில் இருந்த வாலிபர்கள் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தவர்களை பட்டாக்கத்தியால் வெட்டி வழிப்பறியில் ஈடுபட்டனர்' என தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்