ஆலங்குளம் அருகே பட்டப்பகலில் பயங்கரம்; வாலிபர் ஓட, ஓட விரட்டி சரமாரி வெட்டிக்கொலை

ஆலங்குளம் அருகே பட்டப்பகலில் வாலிபர் ஓட, ஓட விரட்டி சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்டார். கோர்ட்டில் ஆஜராகிவிட்டு திரும்பியபோது இந்த வெறிச்செயலில் ஈடுபட்ட மர்ம கும்பலை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.

Update: 2023-04-17 18:45 GMT

ஆலங்குளம்:

ஆலங்குளம் அருகே பட்டப்பகலில் வாலிபர் ஓட, ஓட விரட்டி சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்டார். கோர்ட்டில் ஆஜராகிவிட்டு திரும்பியபோது இந்த வெறிச்செயலில் ஈடுபட்ட மர்ம கும்பலை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.

வாலிபர்

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள வடக்கு கிடாரகுளத்தை சேர்ந்தவர் முத்துப்பாண்டி. இவரது மகன் மணிகண்டன் (வயது 25), பொக்லைன் எந்திர டிரைவர்.

இவர் ஒரு வழக்கு தொடர்பாக தென்காசி கோர்ட்டில் நேற்று ஆஜராகிவிட்டு மதியம் தனது மோட்டார் சைக்கிளில் ஊருக்கு வந்து கொண்டு இருந்தார்.

வெட்டிக் கொலை

கிடாரகுளம் பாலத்தின் அருகே வந்தபோது, ஒரு மர்ம கும்பல் திடீரென்று மோட்டார் சைக்கிளை வழிமறித்து அரிவாளால் மணிகண்டனை ெவட்டியது. இதை சற்றும் எதிர்பாராத அவர் மோட்டார் சைக்கிளை கீழே போட்டுவிட்டு தப்பி ஓடினார்.

எனினும் அந்த கும்பல் ஓட, ஓட விரட்டிச் சென்று, சாலையோரம் இருந்த ஒரு கடை அருகே மணிகண்டனை சரமாரியாக வெட்டியது. இதில் பலத்த காயம் அடைந்த அவர் ரத்தவெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இந்த வெறிச்செயலில் ஈடுபட்ட மர்ம கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டது.

போலீஸ் சூப்பிரண்டு விரைந்தார்

பட்டப்பகலில் நடந்த இந்த கொலை குறித்து உடனடியாக ஆலங்குளம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தென்காசி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாம்சன், இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

மணிகண்டன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

பழிக்குப்பழியா?

தொடர்ந்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அதில், கடந்த 2021-ம் ஆண்டில் நாச்சியார்புரம் விலக்கு காட்டுப்பகுதியில் கிடாரகுளம் நெட்டூரைச் சேர்ந்த ஆடு திருடும் கும்பலுக்கும், மணிகண்டன் தரப்புக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் நெட்டூரைச் சேர்ந்த ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் குற்றவாளியாக மணிகண்டனும் சேர்க்கப்பட்டார்.

இதுதொடர்பாக வழக்கு விசாரணை தென்காசி கோர்ட்டில் நடந்து வருகிறது. நேற்று விசாரணைக்காக கோர்ட்டில் ஆஜராகிவிட்டு மணிகண்டன் வீடு திரும்பினார். இதை நோட்டமிட்ட மர்ம கும்பல் பழிக்குப்பழியாக மணிகண்டனை வெட்டிக் கொலை செய்து இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. எனினும் கொலைக்கு இதுதான் காரணமா? அல்லது வேறு ஏதாவது காரணம் உள்ளதா? என்பது குறித்தும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

உறவினர்கள் மறியல்

இதற்கிடையே, மணிகண்டனின் உறவினர்கள் கிடாரகுளம் பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்கள், கொலையாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

இதையடுத்து மறியலில் ஈடுபட்டவர்களுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். குற்றவாளிகள் யார் என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அவர்கள் உடனடியாக கைது செய்யப்படுவார்கள் என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

வலைவீச்சு

இந்த சம்பவம் குறித்து ஆலங்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தப்பி ஓடிய மர்ம கும்பலை வலைவீசி தேடிவருகிறார்கள். மேலும் கிடாரகுளம், நெட்டூர் பகுதியில் ஏதேனும் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருப்பதற்காக ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

ஆலங்குளம் அருகே பட்டப்பகலில் வாலிபர் ஓட, ஓட விரட்டி சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட பயங்கர சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்