நாசரேத்தில் பயங்கரம்:வாலிபர் சரமாரி வெட்டிக்கொலை

நாசரேத்தில் வாலிபர் சரமாரி வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-07-17 18:45 GMT

நாசரேத்:

தொழிலாளி

தூத்துக்குடி மாவட்டம் நாசரேத்தை அடுத்த மூக்குப்பீறியைச் சேர்ந்தவர் சின்னத்துரை. இவருடைய மகன் செல்வ திரவியம் (வயது 30). இவர் நாசரேத்தில் உள்ள கல் பட்டறையில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இவருக்கு திருமணமாகி, மனைவி விவகாரத்து பெற்று பிரிந்து சென்று விட்டார்.

நேற்று முன்தினம் இரவில் செல்வ திரவியம் நாசரேத்தில் இருந்து மூக்குப்பீறிக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். நாசரேத் 4 கம்பி ரெயில்வே கேட் அருகில் சென்றபோது, அங்கு வந்த மர்மநபர்கள் திடீரென்று செல்வ திரவியத்தை வழிமறித்து அவரை அரிவாளால் சரமாரியாக வெட்டினர். இதில் பலத்த காயமடைந்த அவர் உயிருக்கு போராடியவாறு கிடந்தார்.

பரிதாப சாவு

அந்த வழியாக சென்றவர்கள் இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்து, நாசரேத் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயசீலன் மற்றும் போலீசார் விரைந்து சென்று, படுகாயமடைந்த செல்வ திரவியத்தை மீட்டு சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் வழியிலே அவர் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். கொலையாளிகளை பிடிப்பதற்காக, சாத்தான்குளம் துணை போலீஸ் சூப்பிரண்டு அருள் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் பல்வேறு இடங்களுக்கும் சென்று தீவிர விசாரணை நடத்தினர்.

இதில் பரபரப்பு தகவல்கள் வெளியானது. அதன் விவரம் வருமாறு:-

3 பேர் கைது

கடந்த மே மாதம் மூக்குப்பீறியில் நடந்த கோவில் கொடை விழாவில் செல்வ திரவியம் தரப்பினருக்கும், மற்றொரு தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது அங்கிருந்தவர்கள் அவர்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். இதனால் ஆத்திரத்தில் இருந்த மற்றொரு தரப்பினர் செல்வ திரவியத்தை வெட்டிக்கொலை செய்தது தெரிய வந்தது.

இதுதொடர்பாக செய்துங்கநல்லூர் தென்னஞ்சோலை தெருவைச் சேர்ந்த முருகன் மகன் முத்து மனோகர் (வயது 21), பாளையங்கோட்டை கிருஷ்ணாபுரம் கலைக்கோவில் நகரைச் சேர்ந்த பாலசுப்பிரமணியம் மகன் முப்பிடாதி ராஜா (22), திருவள்ளூர் நெற்குன்றம் ராஜீவ்காந்தி நகரைச் சேர்ந்த ராமர் மகன் கருப்பசாமி (20) ஆகிய 3 பேரை போலீசார் நேற்று கைது செய்தனர். மேலும் தலைமறைவான சிலரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்