ரேஷன் கடைகளுக்கு பொருட்களை எடுத்து செல்லும்வாடகை லாரிகளுக்கான டெண்டர் ரத்துபெட்டியை மர்மநபர்கள் தூக்கி சென்றதால் பரபரப்பு

Update: 2023-02-08 19:00 GMT

நாமக்கல்லில் ரேஷன் பொருட்களை ஏற்றி செல்லும் லாரிகளுக்கான டெண்டர் பெட்டியை மர்ம நபர்கள் தூக்கி சென்றதால் டெண்டர் ரத்து செய்யப்பட்டது.

லாரிகளுக்கான டெண்டர்

நாமக்கல் மற்றும் பரமத்தி ஒன்றியங்களுக்கு உட்பட்ட பகுதியில் உள்ள ரேஷன் கடைகளுக்கு அத்தியாவசிய பொருட்கள் லாரி மூலம் அனுப்பப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ஏற்கனவே உள்ள டெண்டர் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் முடிவடைந்தது. இதற்கிடையே 2023-2024 ஆண்டிற்கான டெண்டர் நடைபெறுவதாக கடந்த மாதம் 20-ம் தேதி அறிவிப்பு வெளியானது.

அதில் நாமக்கல் வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்க அலுவலகத்தில் டெண்டர் நடைபெறும் எனவும், காலை 6 மணிக்கு தொடங்கி காலை 10.30 மணி வரை டெண்டரில் பங்கேற்கலாம் எனவும், அதன்பின் குறைந்த ஒப்பந்த புள்ளிகள் கோரப்பட்டவர்களுக்கு டெண்டர் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.

பெட்டியை தூக்கி சென்றனர்

இந்த நிலையில் நேற்று காலை 10.30 மணி வரை டெண்டர் விண்ணப்பத்தை போட பெட்டி வைக்கப்படாமல் இருந்தது. இதுகுறித்து அதிகாரிகளிடம் டெண்டர் போட வந்தவர்கள் விளக்கம் கேட்டுள்ளனர். அதற்கு நாமக்கல், பரமத்தி பகுதிகளுக்கு தனித்தனியாக பெட்டிகள் தயார் செய்து கொண்டிருப்பதாக கூறிய அதிகாரிகள் சிறிது நேரத்தில் டெண்டருக்கான பெட்டியை வைத்தனர்.

அப்போது பெட்டியில் நாமக்கல் பகுதிக்கான விண்ணப்பத்தை போடலாம் என காத்திருந்த சிலர், அலுவலகத்தில் இருந்த நாமக்கல் பகுதிக்கான பெட்டியில் தங்களது விண்ணப்பத்தை போட்டு விட்டு, அதில் வேறு யாரையும் போட விடாமல் டெண்டர் பெட்டியை தூக்கி கொண்டு சங்க அலுவலகத்தை விட்டு அவசர, அவசரமாக வெளியே சென்று விட்டனர். இதனால் மற்றவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

தர்ணா போராட்டம்

மர்ம நபர்கள் பெட்டியை தூக்கி சென்றபோது அங்கிருந்த அதிகாரிகள் அவர்களை தடுக்கவில்லை எனவும், டெண்டரில் பங்கேற்க ஒரு சிலரை மட்டுமே அனுமதித்ததாகவும் அங்கிருந்த சிலர் குற்றம்சாட்டி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்து கூட்டுறவு சங்க அலுவலகத்திற்கு வந்த நாமக்கல் போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கரபாண்டியன் தர்ணாவில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.

இதுகுறித்து கூட்டுறவு சங்க அதிகாரிகளிடம் கேட்டபோது, டெண்டர் பெட்டியை தூக்கி சென்றவர்கள் யார் என தெரியவில்லை. அதனால் டெண்டரை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்து உள்ளோம் என்றனர். இதற்கிடையே பாதிக்கப்பட்ட நபர்கள் டெண்டருக்கான பெட்டியை தூக்கி சென்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி நாமக்கல் மாவட்ட கலெக்டர் மற்றும் நாமக்கல் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்து உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்