சவர்மா விற்பனைக்கு தற்காலிக தடை

திண்டுக்கல் மாவட்டத்தில், சவர்மா விற்பனைக்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது என்று உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் தெரிவித்துள்ளார்.

Update: 2023-10-16 23:15 GMT

பணம் கேட்டு மிரட்டல்

திண்டுக்கல் மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை, மாவட்ட ஓட்டல் மற்றும் ரெஸ்டாரண்டு உரிமையாளர்கள் சங்கம் சார்பில் விழிப்புணர்வு கூட்டம் திண்டுக்கல்லில் நடந்தது.

கூட்டத்துக்கு உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் கலைவாணி தலைமை தாங்கினார். அப்போது ஓட்டல் உரிமையாளர்கள், உணவு பொருட்களில் அஜினமோட்டோ சேர்ப்பதால் ஏற்படும் பாதிப்பு குறித்து அவர் கேள்வி எழுப்பினர்.

இதேபோல் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் என கூறிக்கொண்டு பணம் கேட்டு மிரட்டுவதாகவும், சிலர் வேண்டுமென்றே உணவில் பூச்சி கிடக்கிறது என புகார் அளிப்பதாகவும் ஓட்டல் உரிமையாளர்கள் குற்றம் சாட்டினர்.

அஜினமோட்டா பயன்பாடு

ஓட்டல் உரிமையாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கு, பதில் அளித்து உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் பேசியதாவது:-

தீபாவளி பண்டிகை நெருங்குவதால் பல்வேறு இனிப்பு வகைகள் விற்பனைக்கு வருகிறது. அவ்வாறு விற்பனைக்கு வைக்கப்படும் இனிப்பு பாக்கெட்டில் தயாரிப்பு தேதி, அனுமதி எண் ஆகியவை கட்டாயம் இடம்பெற வேண்டும். மேலும் வாடிக்கையாளர்களை கவரும் வகையில் செயற்கை வண்ணங்கள் சேர்க்க கூடாது. ஒருமுறை பயன்படுத்திய எண்ணெய் வகைகளை மீண்டும் பயன்படுத்த கூடாது.

ஓட்டல்கள் மற்றும் ரெஸ்டாரண்டுகளில் உணவுகள் தரமானதாக இருக்க வேண்டும். சமையல் செய்யும் இடங்கள் சுத்தமானதாக இருக்க வேண்டும். அஜினமோட்டோ, புற்றுநோய்க்கு வித்திடுகிறது. இதனால் உணவுபொருட்களில் அஜினமோட்டோ சேர்ப்பதை தவிர்த்து, ஓட்டல் உரிமையாளர்கள் மனிதநேயத்துடன் நடந்துகொள்ள வேண்டும்.

சவர்மாவுக்கு தடை

அசைவ உணவகங்களில், சிக்கன் போன்ற இறைச்சிகளை பதப்படுத்தி வைப்பதை தவிர்க்க வேண்டும். பதப்படுத்தி வைக்கப்படும் இறைச்சி உணவுகளால், உடல்நல பாதிப்பு ஏற்படுகிறது. குறிப்பாக சவர்மா குறிப்பிட்ட நேரம் சூடாகி வேக வைக்கப்பட வேண்டும். சிக்கனில் உள்ள பாக்டீரியாக்கள் அழியும் முன்பாக அவசர, அவசரமாக சவர்மா பொதுமக்களுக்கு வினியோகிக்கப்படுகிறது.

சரியாக வேகாத இறைச்சி மனிதர்களுக்கு உடல் உபாதைகளை ஏற்படுத்துகிறது. ஆங்காங்கே சவர்மா குறித்து பிரச்சினைகள் எழுவதால், திண்டுக்கல் மாவட்டத்தில் சவர்மா விற்பனைக்கு தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது.

அரசு அடையாள அட்டை

ஓட்டல்களில் உணவு பாதுகாப்பு அதிகாரி என கூறிக்கொண்டு சிலர் பணம் பறித்து வருவதாக புகார் வருகிறது. போலியான நபர்களிடம் ஏமாறாமல் இருப்பதற்கு, அரசு சார்பில் வழங்கப்பட்ட அடையாள அட்டையை காண்பிக்க வற்புறுத்த வேண்டும்.

இதேபோல் கடை உரிமையாளர்களை மிரட்டுவதற்காக வேண்டுமென்றே சிலர் புகார் செய்கின்றனர். இதுகுறித்து உண்மையாக விசாரித்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்த கூட்டத்தில் உணவு பாதுகாப்பு அலுவலர் செல்வம், ஓட்டல் மற்றும் ரெஸ்டாரண்டு சங்க தலைவர் ராஜ்குமார், உதவி தலைவர் வெங்கடாசலம், செயலாளர் வெங்கடேஷ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்