சென்றாய பெருமாள் கோவில் தேரோட்டம்

ஆட்டையாம்பட்டி அருகே ராக்கிப்பட்டி சென்றாய பெருமாள் கோவில் தேரோட்டம் நடந்தது.

Update: 2023-04-06 20:10 GMT

பனமரத்துப்பட்டி

ஆட்டையாம்பட்டி அருகே ராக்கிப்பட்டி சென்றாய பெருமாள் கோவில் தேரோட்டம் நடந்தது.

சென்றாய பெருமாள் கோவில்

ஆட்டையாம்பட்டி அருகே ராக்கிப்பட்டி கிராமம் செங்கோடம்பாளையம் சென்றாய பெருமாள் மலை கோவிலில் பங்குனி தேர்த்திருவிழா கடந்த 2-ந் தேதி தொடங்கியது. தொடர்ந்து 3-ந் தேதி கருட வாகனம், 4-ந் தேதி ஆஞ்சநேயர் குதிரை வாகனங்களில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடந்தது. காலை 6 மணிக்கு சுவாமி மலையில் இருந்து இறங்கி தேரில் எழுந்தருளினார். மாலை 4 மணிக்கு முதலில் சிறிய திருவடியான ஆஞ்சநேயர் தேரை குழந்தைகள், பெண்கள், இளைஞர்கள் வடம் பிடித்து இழுத்தனர். தேர் மலைக்கோவிலை சுற்றி வலம் வந்தது.

மஞ்சள் நீராட்டு விழா

தொடர்ந்து ஸ்ரீதேவி, பூதேவி சமேத சென்றாய பெருமாள் வீற்றிருந்த பெரிய தேரை பக்தி கோஷங்கள் முழங்க பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். இரவு புஷ்ப விமானத்தில் சுவாமி ஊர்வலம் நடந்தது.

நாளை (சனிக்கிழமை) அதிகாலை 3 மணிக்கு வாணவேடிக்கையுடன் சத்தாபரண ஊர்வலமும், 9-ந் தேதி மஞ்சள் நீராட்டு நிகழ்ச்சியுடன் தேர்த்திருவிழா முடிந்து சுவாமி மலைக்கு புறப்படுதல் நிகழ்ச்சியும் நடக்கிறது.

மேலும் செய்திகள்