தத்தனூர் குடிக்காடு கிராமத்தில் கோவில் திருவிழா: இருதரப்பினர் இடையே அமைதி பேச்சுவார்த்தை

தத்தனூர் குடிக்காடு கிராமத்தில் கோவில் திருவிழா நடத்துவது தொடர்பாக இருதரப்பினர் இடையே அமைதி பேச்சுவார்த்தை நடைபெற்றது. அப்போது பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படுத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டது.

Update: 2023-06-29 19:05 GMT

அமைதி பேச்சுவார்த்தை

அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே தத்தனூர் குடிக்காடு கிராமத்தில் உள்ள விநாயகர், மாரியம்மன், பெரிய நாயகி, பேச்சாயி மற்றும் சித்தி விநாயகர் கோவிலில் திருவிழா நடத்துவது தொடர்பாக பெரிய சோழங்கன் வகையறாவுக்கும், சின்ன சோழங்கன் வகையறாவுக்கும் இடையே பிரச்சினை நிலவி வந்தது. இதையடுத்து, இருதரப்பினர் இடையே அமைதி பேச்சுவார்த்தை உடையார்பாளையம் தாசில்தார் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு தாசில்தார் துரை தலைமை தாங்கினார். உடையார்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வேல்சாமி முன்னிலை வகித்தார்.

பொது அமைதிக்கு குந்தகம்

கூட்டத்தில் பெரிய சோழங்கன் வகையறா சார்பாக மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கின் நீதிமன்ற தீர்ப்பு வரும் வரை கடந்த ஆண்டுகளில் வழிபட்ட நடைமுறையை தொடர்ந்து பின்பற்ற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. மேலும் இருதரப்பினரும் பொது அமைதிக்கு எவ்வித இடையூறும் ஏற்படாத வகையில் நடந்து கொள்ள வேண்டும் என்றும் மீறி பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படுத்தும் நபர்கள் மீது போலீசார் மூலம் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. இதற்கு இரு தரப்பினரும் ஒரு மனதாக ஏற்றுக் கொண்டனர்.

கூட்டத்தில் கலியபெருமாள், கவுதமன் உள்ளிட்ட ஊர் நாட்டார்கள் மற்றும் முக்கியஸ்தர்கள், வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்