நீலகண்ட பிள்ளையார் கோவிலில் சித்திரை திருவிழா

பேராவூரணி பிள்ளையார் கோவிலில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

Update: 2023-04-26 18:57 GMT

பேராவூரணி பிள்ளையார் கோவிலில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

நீலகண்ட பிள்ளையார் கோவில்

தஞ்சை மாவட்டம் பேராவூரணி முடப்புளிக்காடு கிராமத்தில் பிரசித்திப்பெற்ற ஏந்தல் நீலகண்ட பிள்ளையார் கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் சித்திரை திருவிழா விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான சித்திரை திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இதைத்தொடர்ந்து 12 நாட்கள் விழா நடைபெற உள்ளது. இதில் வண்ணமயில் வாகனம், காமதேனு வாகனம், பூத வாகனம், அன்ன வாகனம், மயில் வாகனம், ரிஷப வாகனம் என பல்வேறு வாகனங்களில் சாமி வீதி உலா நடைபெற உள்ளது.

திருவிழாவில் முக்கிய நாளான வருகிற 4-ந் தேதி (வியாழக்கிழமை) அன்று அதிகாலை 4 மணி முதல் பால்காவடி, பன்னீர்காவடி, அக்னி காவடி, தொட்டில் காவடி, பறவை காவடி என பல்வேறு காவடிகளை பக்தர்கள் எடுத்து வந்து தங்களுடைய நேர்த்திக்கடனை செலுத்த உள்ளனர்.

தேரோட்டம்

அன்றைய தினம் மாலை 5 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது. இதில் சிறப்பு அலங்காரத்தில் வள்ளி தெய்வானையுடன் முருகன் தேரில் எழுந்தருளி அருள்பாலிக்கிறார். தொடர்ந்து 10-ம் நாள் திருவிழாவாக தீர்த்தவாரியும், 11-ம் நாள் திருவிழாவாக திருக்கல்யாணமும், இரவு தெப்ப உற்சவமும் நடக்கிறது.

12-ம் நாள் திருவிழாவாக விடையாற்றி உற்சவம் நடைபெற உள்ளது. திருவிழாவிற்காக ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி ரவிச்சந்திரன், பரம்பரை அறங்காவலர்கள், முடப்புளிக்காடு கிராமத்தார்கள், ஸ்தானிகர், சங்கரன் வகையறாக்கள் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகிறார்கள். 

Tags:    

மேலும் செய்திகள்