பங்குனி மாத சஷ்டியையொட்டி முருகன் கோவில்களில் சிறப்பு பூஜை

Update: 2023-03-27 18:45 GMT

நாமக்கல்:

பங்குனி மாத சஷ்டியையொட்டி நாமக்கல் மாவட்டத்தில் உள்ள முருகன் கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது.

பங்குனி மாத சஷ்டி

நாமக்கல்லில் மோகனூர் சாலையில் உள்ள பாலதண்டாயுதபாணி சாமி கோவிலில் நேற்று பங்குனி மாத வளர்பிறை சஷ்டியையொட்டி பால், தயிர், திருமஞ்சனம் உள்ளிட்ட பல்வேறு நறுமண பொருட்களால் சாமிக்கு அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜை செய்யப்பட்டது. தொடர்ந்து சாமி ராஜ அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

இதில் நாமக்கல் மட்டுமின்றி சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

வேல் வடிவம் கொண்ட சுப்பிரமணியர்

அணிச்சம்பாளையத்தில் உள்ள வேல் வடிவம் கொண்ட சுப்பிரமணியர் கோவிலில் சஷ்டியையொட்டி சிறப்பு பூஜை நடந்தது. முன்னதாக வேலுக்கு பால், தயிர், சந்தனம் மற்றும் பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து சாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

இதேபோல் கபிலர்மலை பாலசுப்பிரமணியசாமி கோவில், பிராந்தகத்தில் 34½ அடி உயரத்தில் உள்ள ஆறுமுக கடவுள் கோவில், பாண்டமங்கலம் புதிய காசி விஸ்வநாதர் கோவிலில் உள்ள சுப்ரமணியர், பொத்தனூர் அருகே உள்ள பச்சமலை முருகன் கோவில், பிலிக்கல்பாளையம் விஜயகிரி வடபழனி ஆண்டவர் கோவில், நன்செய்இடையாறு திருவேலீஸ்வரர் கோவிலில் உள்ள சுப்ரமணியர், ராஜா சுவாமி கோவில், பேட்டை பகவதியம்மன் கோவிலில் உள்ள முருக பெருமான், நல்லியாம்பாளையத்தில் உள்ள சுப்பிரமணியர் உள்பட மாவட்டத்தில் உள்ள அனைத்து முருகன் கோவில்களிலும் சஷ்டியையொட்டி சிறப்பு பூஜை நடந்தது. 

மேலும் செய்திகள்