திண்டுக்கல், பட்டிவீரன்பட்டியில் 108 சங்காபிஷேகம்
திண்டுக்கல் மற்றும் பட்டிவீரன்பட்டியில் 108 சங்காபிஷேகம் நடைபெற்றது.
திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவிலில் கார்த்திகை மாதத்தின் சோம வாரத்தில் கலசம் மற்றும் சங்காபிஷேகம் நடைபெறுவது வழக்கம். அதன்படி கார்த்திகை மாத சோம வார நாளையொட்டி இன்று கலச பூஜை மற்றும் 108 சங்காபிஷேகம் நடைபெற்றது. இதையொட்டி பகல் 12 மணி அளவில் சுவாமி காளகத்தீசுவரர்-ஞானாம்பிகை, சுவாமி பத்மகிரீசுவரர்-அபிராமி அம்மனுக்கு சிறப்பு கலசம் மற்றும் 108 சங்கு சிவ யாகம் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து மாலையில் பிரதோஷ வழிபாடுகள் நடந்தன. இதில் மூலவர் சுவாமிகள், நந்திக்கு பால், பழம், பன்னீர் உள்பட 16 வகையான பொருட்களால் அபிஷேகம் மற்றும் 108 சங்காபிஷேகம், மகா தீபாராதனை நடைபெற்றது.
அதன்பின்பு சிவபெருமானுக்கு பஞ்சமுக அர்ச்சனை, மகா அலங்கார தீபாராதனை நடந்தது. பின்னர் சுவாமி, அம்பாள் வெள்ளி இடப வாகனத்தில் கோவில் உட்பிரகாரத்தில் மூன்று முறை வலம் வருதல் நடைபெற்று பிரசாதம் வழங்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். மேலும் திண்டுக்கல் ரெயிலடி சித்தி விநாயகர் கோவில், காந்திஜி புதுரோடு ஆதி சிவன் கோவில், செட்டிநாயக்கன்பட்டி சிவபுரம் அழகாம்பிகை உடனுறை சிவகுருசாமி கோவில் உள்பட திண்டுக்கல்லில் உள்ள அனைத்து சிவன் கோவில்களிலும் பிரதோஷ வழிபாடுகள் நடைபெற்றன.
இதேபோல் பட்டிவீரன்பட்டியில் உள்ள ஜோதிலிங்கேஸ்வரர் கோவிலில் 108 சங்காபிஷேகம் நடந்தது. அப்போது 108 சங்குகளில் புனிதநீர் ஊற்றி சிவ வஜ்ரவேல் வடிவில் அலங்கரிக்கப்பட்டு, பூஜைகள் நடந்தன. அதன்பிறகு ஜோதிலிங்கேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.