ராமர், சீதை வணங்கிய சோமேஸ்வரர் கோவில் தெப்பக்குளம் புதுப்பிக்கப்படுமா? பக்தர்கள் எதிர்பார்ப்பு

ராமர், சீதை வணங்கிய சோமேஸ்வரர் கோவில் தெப்பக்குளம் புதுப்பிக்கப்படுமா? பக்தர்கள் எதிர்பார்ப்பு;

Update:2022-09-27 00:15 IST

சேந்தமங்கலம்:

சேந்தமங்கலம் சோமேஸ்வரர் கோவில் தெப்பக்குளத்தை தூர்வாரி புதுப்பிக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

சோமேஸ்வரர் கோவில்

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற ஆன்மிக தலங்களில் சேந்தமங்கலம் சோமேஸ்வரர் கோவிலும் ஒன்றாகும். புராண காலத்தில் பிரிந்திருந்த ராமர், சீதை ஒன்று சேர்ந்து சேந்தமங்கலத்தில் சோமேஸ்வரரை வழிபட்டனர் என்பது இந்த கோவிலின் சிறப்பு அம்சமாக கருதப்படுகிறது.

மேலும் இந்த கோவிலில் ராமர், சீதை ஒன்றாக சேர வேண்டும் என்பதற்காக சிவனை, ஆஞ்சநேயர் வழிபட்டு வந்ததாகவும் நம்பப்படுகிறது. ராமர், சீதா தேவி சேந்தமங்கலத்தில் சேர்ந்ததால் சேந்தமங்கலம் என்று பெயர் வந்ததாகவும் கூறுவார்கள். இந்த கோவில் சுமார் 1,000 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டதாக தெரிகிறது.

இந்த கோவில் உள்பிரகாரத்தில் சந்திரன், சூரியன் மற்றும் தெய்வங்களுடன் சனீஸ்வரன் நவக்கிரகங்களை கிழக்கு திசையில் பார்ப்பதாக சிலைகள் அமைத்து உள்ளனர். இந்த சிறப்பு அம்சம் காரைக்கால் அருகே திருநள்ளாறில் உள்ளது. அதற்கு அடுத்தாற்போல் சேந்தமங்கலத்தில் தான் காணப்படுகிறது. மேலும் இந்த கோவிலுக்குள் தட்சிணாமூர்த்தி ரிஷப வாகனத்தில் அமர்ந்து பக்தர்களுக்கு காட்சி தருவது மற்றொரு சிறப்பு அம்சமாகும் ஆகும். அத்துடன் இந்த கோவிலில் 72 நாயன்மார்கள் உள்ளனர்.

தெப்ப உற்சவ நிகழ்ச்சி

பண்டைய காலத்தில் சோமேஸ்வரருக்கு விழா எடுக்கும் போது மூலவரை அங்குள்ள தெப்பக்குளத்தில் வைத்து தெப்ப உற்சவ நிகழ்ச்சி நடத்தி வந்துள்ளனர். அது அப்பகுதியில் கண்கொள்ளா காட்சியாக இருந்து வந்தது. ஆனால் காலப்போக்கில் அந்த தெப்பக்குளம் மாசடைந்து வந்ததால் தெப்ப உற்சவ நிகழ்ச்சி நடைபெறாமலேயே இருந்து வருகிறது.

மேலும் சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பாக தெப்பக்குளத்திற்கு சோமேஸ்வரர் கோவில் பின்புறம் உள்ள ஓடையிலிருந்து தண்ணீர் வந்து செல்வது போல் வாய்க்கால் அமைக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது அந்த வாய்க்கால் ஆக்கிரமிப்பால் மூடப்பட்டு உள்ளது. இதனால் தெப்பக்குளத்தில் கழிவுநீர் தேங்கி தற்போது சகிக்க முடியாத அளவில் துர்நாற்றம் வீசி சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது.

சிறந்த ஆன்மிக தலமாக விளங்கும் சேந்தமங்கலத்தில் இது ஒரு பெரும் குறையாக பொதுமக்களிடையே பேசப்பட்டு வருகிறது. மேலும் அந்த தெப்பக்குளம் குறித்து சோமேஸ்வரர் கோவில் அர்ச்சகர்கள் கூறும்போது தெப்பக்குளத்தை சுத்தம் செய்து தெப்ப உற்சவ நிகழ்ச்சி நடத்தினால், தான் ஊருக்கு சுபிட்சம் கிடைக்கும் என்று தெரிவித்து வருகின்றனர்.

தூர்வார வேண்டும்

இதுகுறித்து அரிசி வியாபாரி துரை மூர்த்தி கூறியதாவது;- சோமேஸ்வரர் கோவில் தெப்பக்குளம் சுமார் 10 அடி ஆழம் கொண்டதாகும். அங்குள்ள கழிவுநீரை உடனடியாக அகற்றி குளத்தை தூர்வாரி சுத்தம் செய்ய வேண்டும். அங்கு ஒரு போர்வெல் அமைத்து தண்ணீர் வினியோகத்திற்கு ஏற்பாடு செய்ய வேண்டும்.

குளத்தின் 4 பகுதியிலும் நடைபாதை அமைத்து பொதுமக்கள் நடைபயிற்சி செல்லும் வகையில் சிறு பூங்காவாக மாற்ற வேண்டும். அத்துடன் சோமேஸ்வரர் ஓடையில் இருந்து தண்ணீர் வரும் வாய்க்காலை ஆக்கிரமிப்பில் இருந்து அகற்றி பழையபடி ஓடையில் இருந்து தெப்பக்குளத்திற்கும், தெப்பக்குளத்தில் இருந்து ஓடைக்கும் தண்ணீர் செல்லும் வகையில் மாற்றி அமைக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கட்டண கழிப்பறைகள்

சமூக சேவகர் நாகலட்சுமி கூறியதாவது:- சோமேஸ்வரர் கோவிலில் உடனடியாக செய்ய வேண்டியது தரைத்தளத்தில் கற்கள் பதிக்க வேண்டும். அவ்வாறு செய்தால் பக்தர்கள், பொதுமக்கள் அங்கு சிரமம் இல்லாமல் வந்து செல்லலாம். மேலும் சோமேஸ்வரர் கோவில் தெப்பக்குளத்தை புதுப்பித்து அங்கு ஆண்கள், பெண்கள் உபயோகிக்க கட்டண கழிப்பறைகள் கட்ட வேண்டும் அப்போதுதான் தெப்பக்குளம் சுத்தமாகவும், சுகாதாரமாகவும் காணப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்