தெலுங்கு படத்தின் 'ரீமேக்' விவகாரம்: விஜய் சேதுபதிக்கு எதிரான வழக்கு ரத்து

தெலுங்கு படத்தின் ‘ரீமேக்’ விவகாரம் தொடர்பாக நடிகர் விஜய் சேதுபதிக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

Update: 2022-12-19 21:36 GMT

சென்னை,

தெலுங்கு நடிகர் வைஷ்ணவ் தேஜ், கீர்த்தி ஷெட்டி உள்ளிட்டோர் நடித்த தெலுங்கு திரைப்படம் 'உப்பெனா'. இந்த படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்க, புஜ்ஜி பாபு சனா இயக்கியுள்ளார். தெலுங்கில் பெரும் வெற்றி அடைந்த இந்த படத்தை தமிழில் 'ரீமேக்' செய்யும் உரிமையை, அந்தப் படத்தில் வில்லனாக நடித்த நடிகர் விஜய் சேதுபதி, தன்னுடைய விஜய் சேதுபதி புரோடக்‌ஷன்ஸ் நிறுவனம் பெயரில் வாங்கியுள்ளதாக தகவல் வெளியானது. அதற்கு தடை கேட்டு சென்னை ஐகோர்ட்டில் தேனியைச் சேர்ந்த டல்ஹவுசி பிரபு என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.

கதை திருட்டு

அதில், உலகமகன் என்ற பெயரில் நான் எழுதிய கதை திருடப்பட்டு, உப்பெனா என்ற திரைப்படமாக தெலுங்கில் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் கதை என்னுடையது என்று அறிவிக்க வேண்டும். அந்தப் படத்தின் வருமானத்தில் 50 சதவீதத்தை வழங்கவும், அப்படத்தை தமிழில் எடுக்க விஜய் சேதுபதிக்கு தடை விதித்தும் உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி சி.சரவணன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

தொடர்பு இல்லை

அப்போது விஜய் சேதுபதி சார்பில் வக்கீல் நர்மதா சம்பத் ஆஜராகி, 'உப்பெனா திரைப்படத்தை தமிழில் 'ரீமேக்' செய்யும் உரிமையை விஜய் சேதுபதி பெறவில்லை. அதற்கான எந்த ஆதாரத்தையும் மனுதாரர் தாக்கல் செய்யவில்லை. இந்த விவகாரத்தில் விஜய் சேதுபதிக்கு எந்த தொடர்பும் இல்லை' என்று வாதிட்டார். அதை பதிவு செய்துகொண்ட நீதிபதி, விஜய் சேதுபதியை வழக்கில் இருந்து விடுவித்தும். அவருக்கு எதிரான வழக்கை ரத்து செய்தும் உத்தரவிட்டார். மற்ற எதிர்மனுதாரர்களுக்கு எதிரான வழக்கை இன்று (செவ்வாய்க்கிழமை) விசாரிப்பதாக கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்