தூத்துக்குடியில் வாலிபர் கொலை:"என்னை தொடர்ந்து மிரட்டியதால் கொலை செய்தேன்"
தூத்துக்குடியில் வாலிபர் கொலை: தூத்துக்குடியில் 'என்னை தொடர்ந்து மிரட்டியதால் வாலிபரை கொலை செய்தேன்' என்று கைதான உறவினர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
வெட்டிக் கொலை
தூத்துக்குடி அண்ணாநகர் 4-வது தெருவை சேர்ந்தவர் ஆவுடையப்பன் என்ற வன்னியராஜ். இவர் பிரியாணி கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி சுப்புலட்சுமி (வயது 39). இவர்களுக்கு கணேசன் (18) என்ற மகனும், சத்யா (20) என்ற மகளும் உள்ளனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கணவன், மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சுப்புலட்சுமி, கணவரை பிரிந்து மகளுடன் கே.டி.சி நகரில் உள்ள உறவினர் சுடலைமணி என்பவருடன் வசித்து வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு சத்யாவுக்கு, சுப்புலட்சுமி திருமணம் செய்து வைத்தார். இது குறித்து ஆவுடையப்பனுக்கோ, மகன் கணேசனுக்கோ அவர் தகவல் தெரிவிக்கவில்லையாம். இதனால் அவர்களுக்கு இடையே முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் டி.எம்.பி. காலனியில் வைத்து கணேசனை, சுடலைமணி சரமாரியாக வெட்டிக் கொலை செய்தார். இது குறித்து தென்பாகம் போலீசார் வழக்கு பதிவு செய்து, நேற்று முன்தினம் இரவு சுடலைமணியை கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது அவர் கூறியதாவது:- எனக்கு ஏற்கனவே திருமணமாகிவிட்டது. இந்த நிலையில் 5 ஆண்டுகளுக்கு முன்பு உறவினர் ஆவுடையப்பனின் மனைவியான சுப்புலட்சுமியுடன் சேர்ந்து வாழ்ந்து வருகிறேன். கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஆவுடையப்பன்- சுப்புலட்சுமியின் மகள் சத்யா திருமணம் செய்து கொண்டாள். இதுகுறித்து நாங்கள் ஆவுடையப்பன் குடும்பத்துக்கு தகவல் தெரிவிக்கவில்லை. இதனால் ஆவுடையப்பனும், கணேசனும் என்னைப் பழிவாங்க காத்திருந்தனர்.
தொடர்ந்து மிரட்டல்
இதற்காக கணேசன் தனது நண்பர்களுடன் சேர்ந்து கொண்டு அவ்வப்போது என்னை மிரட்டியும், அவதூறாகவும் பேசி வந்தார். மேலும் ஆவுடையப்பனும், கணேசனும் சேர்ந்து கடந்த மாதம் என்னை தாக்கினார்கள். இதுகுறித்து தென்பாகம் போலீசில் புகார் அளித்து உள்ளேன். கடந்த 18-ந் தேதி எனது மகன் பிறந்தநாள் விழா கொண்டாடினோம். அப்போது, 2, 3 முறை கணேசன் நண்பர்களுடன் சேர்ந்து என்னை அவதூறாக பேசினார். தொடர்ந்து தகராறு செய்து கொண்டே இருந்ததால், அவரை கொலை செய்ய முடிவு செய்தேன். இந்த நிலையில் சம்பவத்தன்று இரவு அரிவாளை எடுத்துக் கொண்டு மோட்டார் சைக்கிளில் வெளியில் வந்தேன். டி.எம்.பி. காலனியில் தனது நண்பர்களுடன் நின்று கொண்டு இருந்த கணேசன் மீண்டும் என்னை அவதூறாக பேசினார். பின்னர் அவரது நண்பர்கள் சென்ற பிறகு, தனியாக மோட்டார் சைக்கிளில் சென்ற கணேசனின் மோட்டார் சைக்கிள் மீது மோதி கீழே விழச்செய்தேன். பின்னர் அரிவாளால் அவரை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி சென்றேன். ஆனால் போலீசார் என்னை பிடித்து விட்டனர்' என்று கூறி உள்ளார்.