திட்டச்சேரி:
திருமருகல் அருகே கார் மோதி வாலிபர் உயிரிழந்தார்.
கார் மோதியது
திருவாரூர் மாவட்டம் விஜயபுரம் சிவன் கோவில் தெருவை சேர்ந்தவர் கதிரவன் (வயது38). இவர் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் கேதாரிமங்கலம் அண்ணா காலனி மெயின் ரோட்டில் வசித்து வரும் தனது உறவினர் கலைவாணி வீட்டுக்கு வந்தார்.தீபாவளியன்று இரவு மெயின் ரோட்டில் பட்டாசு வெடித்துக் கொண்டிருந்தபோது அந்த வழியாக வேகமாக வந்த ஒரு கார் கதிரவன் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது.
பரிதாப சாவு
கதிரவனின் அலறல் சத்தம் கேட்டு வீட்டில் உள்ளவர்கள் பதறியடித்து ஓடி வந்து பார்த்தனர். அப்போது கதிரவன் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு ஆபத்தான நிலையில் ரோட்டில் கிடந்தார்.உடன் அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி ைவத்தனர். அங்கு கதிரவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி கதிரவன் நேற்று உயிரிழந்தார். இது குறித்து திருக்கண்ணபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.