மோட்டார் சைக்கிள் விபத்தில் இளம்பெண் மூளைச்சாவு - உடல் உறுப்புகள் தானம்

கும்மிடிப்பூண்டி அருகே சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்த இளம் பெண்ணின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டது.

Update: 2023-09-06 09:50 GMT

ஆந்திர மாநிலம் பிச்சாட்டூர் அடுத்த ராமாபுரம் கிராமத்தை சேர்ந்த விவசாயி சம்பத் என்பவரின் மகள் கீர்த்தி (வயது 21). பி.காம் பட்டதாரி. இவர் சென்னை அரும்பாக்கத்தில் தங்கி தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.

கடந்த 3-ந்தேதி திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த பாதிரிவேடு அருகே உள்ள கரடிபுத்தூர் கிராமத்தில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சிக்கு கீர்த்தி தனது உறவினரான ராபார்ட் (21) என்பவருடன் வந்தார். பின்னர் அங்கிருந்து தனது வீட்டுக்கு செல்வதற்காக அவர் மோட்டார் சைக்கிளில் ராபார்டுடன் சென்று கொண்டு இருந்தார்.

கரடிபுத்தூர் பாலம் அருகே செல்லும்போது சாலையில் இருந்த பள்ளத்தில் மோட்டார் சைக்கிள் நிலை தடுமாறி இருவரும் கீேழ விழுந்தனர். இந்த விபத்தில் ராபர்ட் லேசான காயத்துடன் உயிர் தப்பினார். கீர்த்தி படுகாயமடைந்தார்.

அந்த வழியாக வந்தவர்கள் கீர்த்தியை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சென்னை ராஜீவ் காந்தி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி அவர் நேற்று மூளைச்சாவு அடைந்தார்.

அவரது பெற்றோர்கள் சம்மதத்துடன் அவரது இதயம், கல்லீரல், இரண்டு சிறுநீரகங்கள், நுரையீரல், இரண்டு கண்கள் ஆகிய 7 உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டது. இந்த விபத்து குறித்து சப்-இன்ஸ்பெக்டர் மாரிமுத்து தலைமையில் பாதிரிவேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்