காலத்திற்கேற்ப தொழில்நுட்பங்களை கற்றுக்கொள்ள வேண்டும்; ஏ.டி.ஜி.பி. அறிவுரை
காலத்திற்கேற்ப புதிய தொழில்நுட்பங்களை கற்றுக்கொள்ள வேண்டும் என பெண் போலீசாரின் பயிற்சி நிறைவு விழாவில் ஏ.டி.ஜி.பி. வினித் தேவ்வான்கேடே கூறினார்.
காலத்திற்கேற்ப புதிய தொழில்நுட்பங்களை கற்றுக்கொள்ள வேண்டும் என பெண் போலீசாரின் பயிற்சி நிறைவு விழாவில் ஏ.டி.ஜி.பி. வினித் தேவ்வான்கேடே கூறினார்.
பயிற்சி நிறைவு விழா
வேலூர் கோட்டை மைதானத்தில் காவலர் பயிற்சி பள்ளி உள்ளது. இங்கு ஆயுதப்படையை சேர்ந்த 275 பெண் போலீசாருக்கு கடந்த 7 மாதங்களாக பயிற்சி வழங்கப்பட்டு வந்தது. பயிற்சியில் சட்டம், பிரச்சினைகளை கையாளுதல், கலவரத்தை கட்டுப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டது.
கோட்டை மைதானத்தில் நேற்று பயிற்சி நிறைவு விழா நடைபெற்றது. பயிற்சி பள்ளி முதல்வர் அசோக்குமார் தலைமை தாங்கினார். பயிற்சி பள்ளி துணை முதல்வர் ரவிசந்தர் முன்னிலை வகித்தார்.
நேர்மையுடன் பணியாற்ற வேண்டும்
விழாவில் சிறப்பு விருந்தினராக மாநில குற்ற ஆவண காப்பக காவல்துறை ஏ.டி.ஜி.பி. வினித்தேவ்வான்கேடே கலந்துகொண்டு பெண் போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டு சிறப்பாக செயல்பட்ட போலீசாருக்கு பதக்கங்களை வழங்கினார். பின்னர் அவர் பேசியதாவது:-
பொதுமக்களில் ஒருவராக இங்கு வந்து நீங்கள் பயிற்சி பெற்றுள்ளீர்கள். நீங்கள் பணிக்கு செல்லும் போது பொதுமக்களிடம் கனிவாக நடந்து கொள்ள வேண்டும். காலத்திற்கு ஏற்ப உருவாகும் புதிய தொழில்நுட்பங்கள் குறித்து தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டும். காவல்துறையில் எந்த பிரிவில் நீங்கள் பணியாற்றினாலும் நேர்மையுடமும், பொது சேவையுடனும் பணியாற்ற வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
மேலும் வாள்வீச்சு, சிலம்பம், கராத்தே, கண்களில் கருப்பு துணி கட்டிக்கொண்டு துப்பாக்கிகளை பிரித்து மீண்டும் மாற்றுதல் போன்ற பெண் போலீசாரின் சாகச நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இது அங்குள்ளவர்களை மெய்சிலிர்க்க வைத்தது.
விழாவில் போலீசார், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதேபோல வேலூர் நேதாஜி விளையாட்டு மைதானத்தில் உள்ள தற்காலிக காவலர் பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்ற 149 போலீசாருக்கு பயிற்சி நிறைவு விழா நடந்தது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தலைமை தாங்கினார்.
காஞ்சீபுரம் சரக டி.ஜ.ஜி. சத்யபிரியா சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.