போக்சோ வழக்கில் கைதான ஆசிரியர் பணியிடை நீக்கம்

கன்னியாகுமரியில் போக்சோ வழக்கில் கைதான அரசு பள்ளி ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

Update: 2023-08-11 21:59 GMT

நாகர்கோவில்:

கன்னியாகுமரியில் போக்சோ வழக்கில் கைதான அரசு பள்ளி ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

ஆசிரியர் மீது பாலியல் புகார்

கன்னியாகுமரி அருகே உள்ள மகாராஜபுரம் பகுதியில் அரசு பள்ளியில் படித்த மாணவி ஒருவருக்கு ஆசிரியர் ஒருவர் பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்து அந்த மாணவி தனது பெற்றோரிடம் கூறினார். இந்த நிலையில் நேற்றுமுன்தினம் மாணவியின் பெற்றோர் பள்ளிக்கு வந்து முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுபற்றி தகவல் அறிந்த கன்னியாகுமரி போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது நெல்லை மாவட்டம் கூடங்குளம் மாடித்தோட்டம் பகுதியை சேர்ந்த பச்சைப் பூ ராஜா (வயது 41) என்பது தெரியவந்தது. போலீசார் அவரை பிடிக்க நடவடிக்கை மேற்கொண்டனர். மாணவிகள் மற்றும் பெற்றோர் போராட்டம் நடத்துவதை அறிந்த ஆசிரியர் பள்ளிக்கு வராமல் தலைமறைவானார். இதையடுத்து போலீசார் அவரை பிடித்தனர்.

பணியிடை நீக்கம்

பிடிபட்ட அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. இதற்கிடையில் ஆசிரியரால் பாதிக்கப்பட்ட மேலும் 7 மாணவிகள் புகார் அளித்தனர். இது போலீசாருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. புகாரில் ஆசிரியர் வகுப்பறையில் தங்களிடம் அத்துமீறி நடந்து கொண்டதாகவும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறியிருந்தனர். ஆசிரியர் பச்சப்பூராஜா மீது அடுக்கடுக்கான புகார்களை மாணவிகள் தெரிவித்ததையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட பச்சப்பூராஜா மீது கன்னியாகுமரி மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் ஆசிரியர் பச்சப்பூராஜாவை ஆசாரிபள்ளம் மருத்துவகல்லூரி ஆஸ்பத்திரியில் மருத்துவ பரிசோதனைக்கு அனுமதித்தனர். இதைத்தொடர்ந்து கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட அவர் நாகர்கோவில் சிறையில் அடைக்கப்பட்டார். அரசு பள்ளி ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டதையடுத்து அவர் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யப்பட்டது. இதையடுத்து ஆசிரியர் பச்சப்பூராஜாவை பணியிடை நீக்கம் (சஸ்பெண்டு) செய்து கல்வி அதிகாரிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்