செல்போனில் பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் கைது

நாகையில், நர்சிங் கல்லூரி மாணவிக்கு செல்போனில் பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியரை போலீசார் கைது செய்தனர்.;

Update:2022-12-15 00:15 IST

நாகையில், நர்சிங் கல்லூரி மாணவிக்கு செல்போனில் பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியரை போலீசார் கைது செய்தனர்.

செல்போனில் பாலியல் தொல்லை

நாகையில் உள்ள தனியார் நர்சிங் கல்லூரி மாணவி ஒருவருக்கு, ஆசிரியர் செல்போனில் பாலியல் தொல்லை கொடுக்கும் ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வந்தது.

இந்த செல்போன் ஆடியோவை சம்பந்தப்பட்ட மாணவி தனது பெற்றோர் மூலம் மாவட்ட சமூகநலத்துறை அலுவலர் உள்ளிட்டவர்களுக்கு அனுப்பி வைத்தார். இதனையடுத்து மாவட்ட சமூகநல அலுவலர் தமிமுன்சா தலைமையில் சமூக நலத்துறை அதிகாரிகள் நேற்று முன்தினம் சம்பந்தப்பட்ட கல்லூரிக்கு வந்தனர்.

மாணவிகளிடம் தனித்தனியே விசாரணை

அந்த கல்லூரியில் படிக்கும் மாணவிகளை தனித்தனியாக அழைத்து விசாரணை மேற்கொண்டனர். பின்னர் மாணவிகளிடம் தனித்தனியே வாக்குமூலம் எழுதி வாங்கினர்.

சுமார் 1 மணி நேரம் நடந்த விசாரணைக்கு பின்னர் சமூகலநத்துறை அதிகாரிகள் கல்லூரியில் இருந்து புறப்பட்டு சென்றனர்.

ஆசிரியர் கைது

இந்த நிலையில் இந்த சம்பவம் குறித்து தனியார் நர்சிங் கல்லூரி நிர்வாகம் சார்பில் நேற்று நாகை டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார், பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ், மாணவிக்கு செல்போனில் பாலியல் தொல்லை கொடுப்பதுபோல் பேசிய நர்சிங் கல்லூரி ஆசிரியரான நாகை வெளிப்பாளையத்தை சேர்ந்த சதீஷ்குமாரை(வயது 37) கைது செய்தனர். பின்னர் அவரை நாகை முதலாவது நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நாகை கிளை சிறையில் அடைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்