ஆசிரியரிடம் ரூ.55 ஆயிரம் நூதன மோசடி
ராமநாதபுரம் அருகே பான்கார்டு இணைக்குமாறு வங்கியில் அனுப்புவதாக கூறி ஆசிரியரின் வங்கி கணக்கில் இருந்து ரூ.55 ஆயிரம் மோசடி செய்தவர்கள் மீது சைபர்கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
ராமநாதபுரம்,
ராமநாதபுரம் அருகே பான்கார்டு இணைக்குமாறு வங்கியில் அனுப்புவதாக கூறி ஆசிரியரின் வங்கி கணக்கில் இருந்து ரூ.55 ஆயிரம் மோசடி செய்தவர்கள் மீது சைபர்கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
ஆசிரியர்
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உள்ள வி.முத்துசெல்லாபுரம் பகுதியை சேர்ந்தவர் சவரிமுத்து மகன் விஜயகுலசாமி (வயது52). இவர் தனியார் பள்ளி ஒன்றில் கைத்தொழில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் கணக்கு தொடங்கி வரவு-செலவு செய்து வருகிறார்.
இந்தநிலையில் இவரின் செல்போன் எண்ணிற்கு கடந்த சில நாட்களுக்குமுன் பான்கார்டு இணைக்காமல் உள்ளதால் வங்கி கணக்கினை நிறுத்தம் செய்ய உள்ளதாக குறுஞ்செய்தி வந்து உள்ளது. அதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த விஜயகுலசாமி அதில் கொடுக்கப்பட்ட லிங்கினை ஏற்று உள்ளே சென்றுள்ளார்.
அதில் கேட்கப்பட்ட வங்கி விவரம், ரகசிய எண் என அனைத்து சுயவிவரங்களையும் ரகசிய விவரங்களையும் பதிவு செய்துள்ளார். சில நிமிடங்களில் உங்களின் பான்கார்டு வெற்றிகரமாக பதிவு செய்யப்பட்டுவிட்டது என்று கூறி குறுஞ்செய்தி வந்துள்ளது. அதனை பார்த்து நிம்மதி பெருமூச்சு விட்ட விஜயகுலசாமிக்கு அடுத்து ஒரு குறுஞ்செய்தி வந்துள்ளது.
புகார்
அதில் அவரின் வங்கி கணக்கில் இருந்து 3 தவணைகளில் ரூ.54 ஆயிரத்து 990 எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது. அதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த விஜய குலசாமி தான் ஏமாற்றப்பட்டு தனது கணக்கில் இருந்து பணம் மோசடியாக எடுக்கப்பட்டதை உணர்ந்தார்.
இதுதொடர்பாக அவர் சைபர்கிரைம் போலீசில் புகார் செய்தார். ராமநாதபுரம் சைபர்கிரைம் போலீஸ் இன்ஸ் பெக்டர் வெற்றிவேல்ராஜன், சப்-இன்ஸ்பெக்டர் திபாகர் ஆகியோர் வழக்குபதிவு செய்து விசாரித்துவருகின்றனர்.