தேயிலை செடிகளில் கொழுந்து பறிக்க வேண்டும்

தேயிலை செடிகளில் கொழுந்து பறிக்க வேண்டும் என விவசாயிகளுக்கு அறிவுரை வழங்கப்பட்டு உள்ளது.

Update: 2023-01-07 18:45 GMT

குன்னூர், 

நீலகிரி மாவட்டத்தில் தேயிலை விவசாயம் பிரதானமாக உள்ளது. பச்சை தேயிலை கொழுந்து பறிக்க பல்வேறு வழிமுறைகளை விவசாயிகள் மேற்கொள்ள உபாசி தேயிலை ஆராய்ச்சி மையம் அறிவுரை வழங்கி வருகிறது. தற்போது பனிக்காலம் என்பதால், தேயிலை செடிகளில் கொழுந்து பறிக்க அறிவுரை வழங்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து உபாசி தேயிலை ஆராய்ச்சி மைய உதவி இயக்குனர் டாக்டர் உதயபானு கூறியதாவது:-

கடந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் ஒரு ஹெக்டருக்கு 425 கிலோ பச்சை தேயிலை மகசூல் கிடைத்தது. நடப்பாண்டில் இந்த மாதத்தில் கடும் பனி நிலவுவதால் குறைவாக மகசூல் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பனியில் இருந்து செடிகளை பாதுகாக்கும் நடவடிக்கைகளை விவசாயிகள் எடுக்க வேண்டும்.

தற்போது வெயில் தொடங்கி விட்டதால் பச்சை தேயிலை பறிக்கும் போது தாய் இலையை விட்டு விட்டு கொழுந்து இலை பறிக்க வேண்டும். அப்போதுதான் செடிகள் ஆரோக்கியமாக இருக்கும். தற்போது இலை வழியாக நுண்ணூட்ட சத்துக்களை தெளிக்கலாம். மகசூல் அதிகம் உள்ள தோட்டங்களில் ஒரு ஹெக்டருக்கு 300 லிட்டர் தண்ணீரில் 2 கிலோ யூரியா, 2 கிலோ பொட்டாஷ் கலந்து தெளிக்கலாம். மகசூல் குறைவாக உள்ள தோட்டத்தில் 2 கிலோ யூரியா, 2 கிலோ பொட்டாசியம் நைட்ரேட் ஆகிய உர கலவைகளை 300 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்கலாம்.

இவ்வாறு அவர் கூறினார். 

Tags:    

மேலும் செய்திகள்