பெரம்பலூர் மாவட்டத்தின் வடக்கு எல்லையான வெள்ளாற்றின் கரையில் அமைந்துள்ள திருவாலந்துறை, திருமாந்துறை, திருவட்டத்துறை என 7 துறைகள் உள்ளது. இதில் 3-வது துறையாக விளங்குகிற சு.ஆடுதுறை கிராமத்தில்தான் குற்றம் பொறுத்தீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதம் மகம் நட்சத்திர நாளில், மாசி மக திருவிழா சிறப்பாக நடைபெறும். அதன்படி இந்த ஆண்டுக்கான மாசி மக திருவிழா கடந்த மாதம் 25-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது.
இந்த நிலையில் இக்கோவில் அருகாமையில் இருக்கும் ஆற்றங்கரையில் இறந்துபோன தனது பெற்றோர் மற்றும் மூதாதையர்களுக்கு மாசி மகத்தன்று தர்ப்பணம் கொடுக்கும் நிகழ்வு நேற்று நடைபெற்றது. அதன்படி இக்கோவிலை சுற்றியுள்ள கிராமத்து மக்கள் ஏராளமானவர்கள் தர்ப்பணம் கொடுத்தனர். பின்னர் அவர்கள் சாமி தரிசனம் செய்து அர்ச்சனை செய்து வழிபட்டனர்.
திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட திருமழபாடி கிராமத்தில் நேற்று மாசி மகத்தை முன்னிட்டு கொள்ளிட கரையோரம் அமைந்துள்ள வைத்தியநாத சுவாமி கோவில் கொள்ளிடக் கரையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கும் நிகழ்வு நடைபெற்றது.இதேபோல் உடையார்பாளையம் பயறணீஸ்வரர் கோவிலில் உள்ள காண்டீப தீர்த்தம் என்னும் குளத்தில் நேற்று முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கும் நிகழ்வு நடைபெற்றது.