முன்னோர்களுக்கு பொதுமக்கள் தர்ப்பணம்
மகாளய அமாவாசையையொட்டி திருப்புவனம் வைகை ஆற்றில் முன்னோர்களுக்கு பொதுமக்கள் தர்ப்பணம் கொடுத்தனர்.
திருப்புவனம்,
மகாளய அமாவாசையையொட்டி திருப்புவனம் வைகை ஆற்றில் முன்னோர்களுக்கு பொதுமக்கள் தர்ப்பணம் கொடுத்தனர்.
மகாளய அமாவாசை
திருப்புவனத்தில்மகாளய அமாவாசையையொட்டி திருப்புவனம் வைகை ஆற்றில் முன்னோர்களுக்கு பொதுமக்கள் தர்ப்பணம் கொடுத்தனர். சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானத்திற்கு உட்பட்ட புஷ்பவனேஸ்வரர்-சவுந்திரநாயகி அம்மன் கோவில் உள்ளது. இங்குள்ள வைகை ஆற்று கரையில் முன்னோர்களுக்கு திதி மற்றும் தர்ப்பணம் கொடுப்பது வழக்கம். இங்கு தர்ப்பணம் கொடுப்பது காசிக்கு நிகரானது என்று பக்தர்களால் நம்பப்படுகிறது. ஒவ்வொரு அமாவாசை தினத்தன்று சிவகங்கை மற்றும் அதை சுற்றியுள்ள மாவட்டங்களை சேர்ந்த ஏராளமானவர்கள் இங்கு வந்து அதிகாலை முதல் தங்களது முன்னோர்களுக்கு திதி மற்றும் தர்ப்பணம் கொடுக்கின்றனர்.
பின்னர் கோவிலுக்கு சென்று விளக்கேற்றி சாமி தரிசனம் செய்வார்கள். குறிப்பாக ஆடி அமாவாசை, மகாளய அமாவாசை, தை அமாவாசை ஆகிய தினங்களில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வதற்கு ஏராளமான மக்கள் திருப்புவனம் வைகை ஆற்றுக்கு வருவது வழக்கமாக உள்ளது.
தர்ப்பணம்
இந்த நிலையில் நேற்று மகாளய அமாவாசையையொட்டி அதிகாலை 6 மணி முதல் சிவகங்கை, மதுரை, விருதுநகர், திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான மக்கள் தங்களது முன்னோர்களுக்கு திதி மற்றும் தர்ப்பணம் கொடுப்பதற்காக திருப்புவனம் வைகை ஆற்றில் குவிந்தனர். வைகை ஆற்றின் ஓரத்தில் தண்ணீர் செல்வதால் ஆற்றின் நடுவே பொதுமக்கள் வசதிக்காக பந்தல்கள் அமைக்கப்பட்டிருந்தன.
முழங்கால் அளவு ஆழமாக உள்ள தண்ணீரில் சென்று பந்தல்கள் இருக்கும் இடத்தில் பொதுமக்கள், முதியவர்கள் அமர்ந்து தங்களது முன்னோர்களுக்கு திதி மற்றும் தர்ப்பணம் கொடுத்தனர்.
கோவிலில் வழிபாடு
தொடர்ந்து புஷ்பவனேஸ்வரர்-சவுந்திர நாயகி அம்மன் கோவிலில் விளக்கு ஏற்றி வழிபாடு செய்தனர். முன்னதாக திருப்புவனம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆதிலிங்கம்போஸ் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
வைகை ஆற்றுக்கு செல்லும் அனைத்து பாதைகளிலும் தடுப்புகள் அமைக்கப்பட்டு பொதுமக்கள் போக்குவரத்து சிரமமின்றி எளிதாக சென்று வர ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. திதி, தர்ப்பணம் செய்ய வந்த பொதுமக்களின் இருசக்கர வாகனங்கள், கார்கள் திருப்புவனம்-மேலூர் ரோட்டின் இருபுறமும் அதிகமாக நின்றன.
திருப்பத்தூரில் சீதளி குளத்தில் அமைந்துள்ள மண்டக படித்துறையில் புரட்டாசி மகாளய அமாவாசையையொட்டி சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பொதுமக்கள் தமது முன்னோர்களை நினைத்து தர்ப்பணம் செய்தனர். அதிகாலை 5 மணிக்கு தொடங்கிய இந்நிகழ்வு நண்பகல் 12 மணி வரை நடந்தது.