திருவள்ளூர் அருகே டேங்கர் லாரி டயர் வெடித்து கார்கள் மீது மோதல்; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 9 பேர் படுகாயம்
திருத்தணி முருகன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்து விட்டு திரும்பியபோது டேங்கர் லாரி டயர் வெடித்து கார்கள் மீது மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 9 பேர் படுகாயம் அடைந்தனர்.
லாரி மோதல்
திருவள்ளூர் ஆயில் மில் பகுதியை சேர்ந்தவர் சதீஷ்குமார் (வயது 38). இவர் தனது பெற்றோர், மனைவி, மகள்கள் இருவர் மற்றும் அம்பத்தூர் பகுதியைச் சேர்ந்த தனது உறவினர் யுவராஜ் (49) குடும்பத்தினர் உள்ளிட்ட 9 பேருடன் நேற்று காலை 2 காரில் திருத்தணி முருகன் கோவிலில் சாமி தரிசனத்திற்கு சென்றுள்ளனர். பின்னர் சாமி தரிசனம் முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் லட்சுமாபுரம் அருகே கார் வந்தபோது, எதிர்திசையில் சென்னையில் இருந்து பால் ஏற்றி வந்த டேங்கர் லாரியின் டயர் திடீரென வெடித்ததால் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி தாறுமாறாக ஓடி சதீஷ்குமார், யுவராஜ் ஆகியோரின் கார்கள் மீது மோதி விபத்துக்குள்ளானது.
9 பேரும் படுகாயம்
இந்த விபத்தில் 2 காரில் பயணம் செய்த 9 பேரும் பலத்த காயமடைந்து உயிருக்கு போராடினர். இதுகுறித்த தகவல் அறிந்ததும் நெடுஞ்சாலை ரோந்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் காயமடைந்த 9 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக திருத்தணி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
விபத்தில் படுகாயமடைந்த சதீஷ்குமார், அவரது பெற்றோர் கமலக்கண்ணன் (71), ரமணி (60) மனைவி புவனேஸ்வரி (35), மகள்கள் சுமிக்ஷா(10), சம்ஷிதா (8), யுவராஜ் அவரது மனைவி சங்கீதா (31), மகள் நிகிதா (15) ஆகிய 9 பேருக்கும் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.
தீவிர சிகிச்சை
பின்னர் மேல் சிகிச்சைக்காக குழந்தைகள் சுமிக்ஷா(10), சம்ஷிதா, நிகிதா ஆகிய 3 பேர் திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் சிறுமி நிகிதாவின் உடல் நிலை மோசமாக உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
இது குறித்து கனகம்மாசத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சாமி தரிசனத்திற்கு சென்று விட்டு வீடு திரும்பும் போது டேங்கர் லாரியின் டயர் வெடித்து 2 கார்கள் மீது மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 9 பேர் படுகாயம் அடைந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.