புதுப்பொலிவு பெறும் தஞ்சை ரெயில் நிலையம்

புதுப்பொலிவு பெறும் தஞ்சை ரெயில் நிலையம்

Update: 2023-07-23 19:39 GMT

அம்ரீத் பாரத் திட்டத்தின் கீழ் ரூ.94 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதால் தஞ்சை ரெயில் நிலையம் புதுப்பொலிவு பெற உள்ளது.

தஞ்சை ரெயில் நிலையம்

தமிழகத்தின் மிகவும் பழமைவாய்ந்த ரெயில் நிலையங்களில் தஞ்சை ரெயில் நிலையமும் ஒன்றாகும். தென்னக ரெயில்வேயின் திருச்சி கோட்டத்திற்கு உட்பட்டது. ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் 2-12-1861-ம் ஆண்டு தஞ்சை ரெயில் நிலையம் தொடங்கப்பட்டது. திருச்சி-நாகை வழித்தடம், ஆங்கிலேயர்களின் வாணிப போக்குவரத்துக்கு பெரிதும் பயன்படுத்தப்பட்டது. அப்போது அந்த வழித்தடம் அகல ரெயில்பாதையாக இருந்தது. பின்னர் மீட்டர்கேஜ் பாதையாக மாற்றப்பட்டு, தற்போது மீண்டும் அகல ரெயில் பாதையாக்கப்பட்டது.

சென்னையில் இருந்து தென்மாவட்டங்களுக்கு செல்லவும், தென்மாவட்டங்களில் இருந்து சென்னை போன்ற நகரங்களுக்கு செல்லவும் முக்கிய வழித்தடமாக தஞ்சை இருந்தது. இந்த வழித்தடம் மெயின் லைனாக இருந்தது. நாளடைவில் திருச்சி-விழுப்புரம் இடையே ரெயில்பாதை அமைக்கப்பட்ட பின்னர் தஞ்சை வழியாக தென்மாவட்டங்களுக்கு இயக்கப்பட்ட பெரும்பாலான ரெயில்கள் ரத்து செய்யப்பட்டன.

எக்ஸ்பிரஸ் ரெயில்கள்

தற்போது தஞ்சை வழியாக சென்னை, ராமேஸ்வரம், திருப்பதி, வாரணாசி, பெங்களூரு, புதுச்சேரி, திருச்செந்தூர், கன்னியாகுமரி, திருநெல்வேலி, கோவை, செங்கோட்டை போன்ற இடங்களுக்கு எக்ஸ்பிரஸ் ரெயில்களும், தஞ்சையில் இருந்தும், தஞ்சை வழியாகவும் மயிலாடுதுறை, திருச்சி, நாகை, நாகூர், காரைக்கால், வேளாங்கண்ணி போன்ற இடங்களுக்கு எக்ஸ்பிரஸ் ரெயில்களும் இயக்கப்பட்டு வருகின்றன. தஞ்சை ரெயில் நிலையத்தில் 5 நடைமேடைகளும், 7 ரெயில்வே பாதைகளும் உள்ளன. நாள்தோறும் ஏராளமான எக்ஸ்பிரஸ் ரெயில்கள் இயக்கப்படுவதால் தஞ்சை ரெயில் நிலையம் எப்போதும் பரபரப்புடன் காணப்படுகிறது. மேலும் பஸ் கட்டணத்தை விட ரெயில் கட்டணம் குறைவு என்பதால் ரெயில்களில் பயணிகள் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. திருச்சி கோட்டத்தில் திருச்சிக்கு அடுத்தபடியாக அதிக வருவாய் ஈட்டித்தரும் ரெயில் நிலையங்களில் தஞ்சை ரெயில் நிலையம் முதன்மையாக விளங்கி வருகிறது.

மறுசீரமைப்பு

நாட்டின் பெரிய, சிறிய நகரங்களில் உள்ள ரெயில் நிலையங்களை மறுசீரமைப்பு செய்ய ரெயில்வே அமைச்சகம் நடவடிக்கை எடுத்துள்ளது. அம்ரீத் பாரத் ரெயில் நிலைய திட்டத்தின் கீழ் தெற்கு ரெயில்வேயில் 90 ரெயில் நிலையங்களை மேம்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக ரூ.934 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தின் கீழ் பயணிகள் காத்திருப்போர் அறைகள் மேம்படுத்தப்படும். ரெயில் நிலையத்தில் சிற்றுண்டிக்கடைகள் அல்லது சிறிய கடைகள் அமைக்கப்படும். ஒரு ரெயில் நிலையத்தில், "ஒரு நிலையம் ஒரு தயாரிப்பு" திட்டத்தின் கீழ் குறைந்தபட்சம் 2 கடைகள் திறக்கப்படும். ரெயில் நிலையத்தின் முக்கிய இடங்களில் ரெயில் வருகை, புறப்பாடு உள்ளிட்ட விவரங்களை காட்சிப்படுத்தும் பலகைகள் பொருத்தப்படும். மேலும் பயணிகளை கவரும் வகையில் இயற்கை காட்சிகள், செடிகள், மரக் கன்றுகள் உருவாக்கப்படும். அனைத்துப் பகுதிகளிலும் 600 மீட்டர் நீளம் கொண்ட உயர்நிலை நடைபாலம் அமைக்கப்படும்.

பயணிகள் காத்திருப்போர் அறை

தஞ்சை ரெயில் நிலையத்தை மேம்படுத்த ரூ.94 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த மேம்பாட்டு பணிகள் பல்வேறு கட்டங்களாக நடைபெற உள்ளது. தஞ்சை ரெயில் நிலையத்தில் ஆவின்பாலகத்திற்கு அருகே நவீன வசதிகளுடன் கழிவறை வசதி செய்யப்பட உள்ளது. தற்போது இருக்கக்கூடிய பார்சல் அலுவலகம் ரெயில் நிலையத்தின் பின்புற பகுதிக்கு மாற்றப்பட இருக்கிறது. பார்சல் அலுவலகம் இருந்த இடத்தில் பயணிகள் காத்திருப்போர் அறை குளிர்சாதன வசதியுடன் அமைக்கப்பட இருக்கிறது.

தற்போது ஒரு உயர்நிலை நடைபாலம் மட்டுமே உள்ளது. இப்போது கூடுதலாக உயர்நிலை நடைபாலம் ஒன்று கட்டப்பட இருக்கிறது. மேலும் பிளாட்பாரங்கள் மேம்படுத்தப்படுவதுடன் மேற்கூரைகளும் முழுமையாக அமைக்கப்பட இருக்கிறது. இதனால் தஞ்சை ரெயில் நிலையம் புதுப்பொலிவு பெற போவதால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

சுரங்கப்பாதை

மேலும் தஞ்சை ரெயில் நிலையத்தில் 5 பிளாட்பாரங்கள் இருக்கிறது. இவற்றில் 1 முதல் 3 பிளாட்பாரங்களுக்கு செல்ல சுரங்கப்பாதை உள்ளது. ரெயில்கள் மூலம் தஞ்சைக்கு வருபவர்களும், தஞ்சையில் இருந்து ரெயில்களில் பிற ஊர்களுக்கு செல்பவர்களுக்கும் இந்த சுரங்கப்பாதை மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. இந்த சுரங்கப்பாதையை 4-வது மற்றும் 5-வது பிளாட்பாரங்களுக்கும் விரிவாக்கம் செய்ய வேண்டும் என பயணிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்