தஞ்சை மாநகராட்சி கூட்டம்
தஞ்சை மாநகராட்சியின் சாதாரண மற்றும் அவசர கூட்டம் மாநகராட்சி கூட்ட அரங்கில் நேற்று நடைபெற்றது;
கூட்டத்தில் மாநகராட்சி செயற்பொறியாளர் ஜெகதீசன், மேலாளர் கிளமெண்ட், மாநகர் நலஅலுவலர் டாக்டர் நமச்சிவாயம், நகரமைப்பு அலுவலர் ராஜசேகர் மற்றும் அதிகாரிகள், அனைத்துக்கட்சி கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக பணி நிறைவு பெறும் மாநகராட்சி மேலாளர் கிளமெண்ட் அந்தோணிராஜூக்கு அனைவரும் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.
நாய், மாடுகள் தொல்லை
கூட்டத்தில் கவுன்சிலர்கள் பேசியதாவது:-
துணை மேயர் அஞ்சுகம் பூபதி (தி.மு.க.) :- ஆரம்ப சுகாதார நிலையங்களில் பிரசவம் அதிக அளவில் நடைபெறுவதற்கான வசதிகளை மேற்கொள்ள வேண்டும். நாய், மாடுகள் சாலைகளில் சுற்றித்திரிவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மண்டல குழு தலைவர் புண்ணியமூர்த்தி (தி.மு.க) : கொண்டி ராஜபாளையம் ரவுண்டானா பகுதியில் செயல்படும் மீன் மார்க்கெட்டால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. எனவே மீன்மார்க்கெட்டிற்கு தனி இடம் ஒதுக்கித்தர வேண்டும்.
மேத்தா (தி.மு.க.) :- தஞ்சை அரண்மனை வளாகத்தில் தேங்கியுள்ள குப்பைகளை உடனுக்குடன் அகற்ற வேண்டும்.
ஒரே இடத்தில் டாஸ்மாக் கடைகள்
எதிர்க்கட்சித் தலைவர் மணிகண்டன் (அ.தி.மு.க.) :- தூய்மை பணியாளர்களுக்கு 1-ந்தேதி சம்பளம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தஞ்சையில் ஒரே இடத்தில் நகைக்கடைகள் அமைய உள்ளது. இதேபோல் நகரில் செயல்படும் டாஸ்மாக் கடைகள் அனைத்தையும் ஒரே இடத்தில் மாற்றி அமைக்க வேண்டும்.
கோபால் (அ.தி.மு.க.) :- தஞ்சை தெற்கு வீதி உள்ளிட்ட 4 வீதிகளில் கழிவுநீர் தேங்காத வண்ணம் நடவடிக்கை எடுக்க வேண்டும். கொசுதொல்லைகள் தாங்க முடியவில்லை. மழை வரும் முன்பு வடிகால்களை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தூர்வார வேண்டும்
கேசவன் (அ.தி.மு.க.) : மழைக்காலம் வரவுள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வடிகால்களை தூர்வாரி மழைநீர் தேங்காத வண்ணம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஜெய்சதீஷ் (பா.ஜ.க) :- விஜயமண்டபதெருவில் பொது இடத்தில் உள்ள ஆக்கிரமிப்பு கட்டிடத்தை இடிக்க வேண்டும். சின்ன ஆஸ்பத்திரியை 24 மணிநேரமும் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தெரு பெயர் பலகை
சர்மிளாதேவி ராஜா (தி.மு.க.) :- தெரு பெயர் பலகைகள் வைக்க வேண்டும். மின் கம்பங்களுக்கு வர்ணம் பூசி புதிய வார்டு எண் எழுத வேண்டும். குடிநீர் இணைப்பில் மீட்டர் பொருத்தும் பணிகள் விரைந்து மேற்கொள்ள வேண்டும்.
மீன்மார்க்கெட்டுக்கு புதிய கட்டிடம்
கவுன்சிலர்களின் கோரிக்கைகளுக்கு மேயர் சண் ராமநாதன் பதில் அளித்து பேசியதாவது :-
கீழவாசலில் ஏற்கெனவே மீன்சந்தை செயல்பட்ட இடத்தில், புதிதாக கட்டிடம் கட்டப்பட்டு அங்கு விரைவில் இடமாற்றம் செய்யப்படும். காமராஜர் மார்க்கெட் விரைந்து திறக்க நடவடிக்கை எடுக்கப்படும். தூய்மை பணியாளர்கள் மட்டும் அல்ல, மாநகராட்சி ஊழியர்களுக்கும் 1-ந்தேதி சம்பளம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மழை காலம் வரும் முன்பு வடிகால்கள் தூர்வாரப்படும். இவ்வாறு அவர் பேசினார்.