தஞ்சை அய்யன்குளத்தில் கழிவுநீர் கலந்ததால் பச்சை நிறமாக மாறிய தண்ணீர்

தஞ்சை அய்யன்குளத்தில் கழிவுநீர் கலந்ததால் பச்சை நிறமாக மாறிய தண்ணீர்

Update: 2022-07-25 20:01 GMT

தஞ்சை அய்யன்குளத்தில் கழிவுநீர் கலந்ததால் பச்சை நிறமாக மாறிய தண்ணீர் துர்நாற்றம் வீசியதால் அந்த தண்ணீரை 2 மோட்டார்கள் மூலம் வெளியறே்றும் பணி நடைபெறுகிறது.

குளங்கள்

தஞ்சை மாநகராட்சி பகுதியில் ஸ்மார்ட்சிட்டி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன. அதன் ஒரு பகுதியாக தஞ்சை மேலவீதியில் உள்ள அய்யன்குளம், கொண்டிராஜபாளையம் பகுதியில் உள்ள சாமந்தான்குளமும் புனரமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. ஒவ்வொரு குளத்திற்கும் தலா ரூ.5 கோடியே 12 லட்சத்து 50 ஆயிரம் செலவில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்த குளங்கள் தஞ்சை மாநகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த குளங்கள் ஆகும். நாயக்கர்கள் மற்றும் மராட்டிய மன்னர்கள் காலத்தில் பண்டைய தஞ்சை நகரில் நீர் மேலாண்மைக்காக அமைக்கப்பட்ட ஜலசுத்ரா என்னும் அமைப்பின் கீழ் இணைக்கப்பட்டுள்ள குளங்கள் ஆகும்.

நடைபாதை

இந்த 2 குளங்களும் மிகவும் பாழடைந்த நிலையில் குளத்தின் சுற்றுச்சுவர்கள் மற்றும் படித்துறைகள் இடிந்தும் பாதுகாப்பற்ற நிலையில் இருந்தது. குளங்களின் உட்பகுதியில் செடி, கொடிகள் வளர்ந்து காணப்பட்டன. பயன்படுத்தாத நிலை காரணமாக 2 குளங்களும் குப்பைகள் கொட்டும் இடமாக காட்சி அளித்தது. மேலும் சுற்றுப்புற பகுதியில் உள்ள வீடுகளில் இருந்து கழிவுநீரும் இந்த குளங்களில் விடப்பட்டது.

இதையடுத்து ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ் இந்த குளங்களில் நிலத்தை சமன்படுத்துதல், வர்ணம் பூசுதல், வேலி அமைத்தல், மின்வசதி செய்தல், குப்பை தொட்டிகள் அமைத்தல், நடைபாதை சுற்றிலும் அமைத்தல், படித்துறைகள் மேம்படுத்துதல், புதிய நுழைவு வாயில் அமைத்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டன. மேலும் குளத்தை சுற்றிலும் கண்ணைக்கவரும் வகையில் ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன.

தண்ணீரை வெளியேற்றும் பணி

தற்போது இந்த 2 குளங்களிலும் நடைபயிற்சியை பொதுமக்கள் காலை, மாலை நேரங்களில் மேற்கொண்டு வருகின்றனர். இந்தநிலையில் தஞ்சை மேலவீதியில் உள்ள அய்யன்குளத்தில் தேக்கி வைக்கப்பட்டிருந்த தண்ணீருடன் கழிவுநீரும் கலந்தது. இதனால் தண்ணீரின் நிறமே மாறியது. பச்சை நிறமாக பாசி படர்ந்து காணப்பட்டது. மேலும் துர்நாற்றமும் வீச தொடங்கியது. இதனால் நடைபயிற்சி மேற்கொள்ளும் மக்கள் சிரமத்திற்கு ஆளாகினர்.

இது தொடர்பாக மாநகராட்சி நிர்வாகத்திற்கு புகார் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அய்யன்குளத்தில் உள்ள தண்ணீரை முழுமையாக வெளியேற்ற மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்தது. அதன்படி 2 மோட்டார்கள் மூலம் தண்ணீரை வெளியேற்றும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த தண்ணீர் முழுவதையும் அகற்றிவிட்டு, புதிதாக நல்ல தண்ணீரை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்