பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் என்ற தகவலால் தமிழர்கள் உற்சாகம் -மதுரையில் பழ.நெடுமாறன் பேட்டி
பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் என்ற தகவலால் தமிழர்கள் உற்சாகம் அடைந்துள்ளார்கள் என்று மதுரையில் பழ.நெடுமாறன் பேட்டி அளித்தார்.
தமிழ்நாடு முற்போக்கு பெண் வக்கீல்கள் சங்கம் சார்பில் உலக மகளிர் தினத்தை முன்னிட்டு மதுரை கே.கே.நகரில் கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் உலக தமிழர் பேரமைப்பு தலைவர் பழ.நெடுமாறன் மற்றும் முன்னாள் நீதிபதி அரிபரந்தாமன் மற்றும் முற்போக்கு பெண் வக்கீல்கள் சங்க நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.இதனை தொடர்ந்து பழ.நெடுமாறன் நிருபர்களிடம் கூறுகையில்,
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அமைச்சரவை தீர்மானத்திற்கு கையெழுத்திடும் அதிகார கடமை மட்டுமே கவர்னரின் அதிகாரம். ஆனால் தீர்மானங்களை கிடப்பில் போட்டுவைத்து அனுமதி தர மறுப்பது, மக்களாட்சி மாண்பை சீர்குலைக்கும். மத்திய அரசு, நீதித்துறையை தங்களது கட்டுப்பாட்டில் கட்டுப்படுத்த முயற்சிக்கின்றனர். இது ஜனநாயக மாண்பை சீர்குலைத்துவிடும். பிரபாகரன் உயிருடன் உள்ளார் என்ற என் கருத்தில் யாரும் உடன்படவில்லை என்பது தவறான கருத்து. அதில் உடன்படாதவர்களுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. அவர் உயிருடன் இருக்கிறார் என்பது குறித்த அறிவிப்பு ஒட்டுமொத்த தமிழர்களுக்கும் புதிய நம்பிக்கையும், உற்சாகத்தையும் தந்துள்ளது. அது தொடர்பான ஆதாரம் கிடைத்தவுடன் அதனை வெளியிடுவேன் என்றார்.