'தமிழகம் அறிவுப்புரட்சி மாநிலமாக மாற வேண்டும்' முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

ஈரோடு புத்தக திருவிழாவை காணொலி காட்சி மூலம் திறந்து வைத்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், ‘தமிழகம் அறிவுப்புரட்சி மாநிலமாக மாற வேண்டும்' என தெரிவித்தார்.

Update: 2022-08-05 23:22 GMT

சென்னை,

ஈரோடு சிக்கய்யநாயக்கர் கல்லூரி மைதானத்தில் புத்தக திருவிழா நேற்று தொடங்கியது. இதனை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்தபடி காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

அப்போது மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

அனைத்து மாவட்டங்களிலும் அரசின் உதவியோடு புத்தக கண்காட்சி நடக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளேன். அதற்காக இந்த ஆண்டு, 4 கோடியே 96 லட்சம் ரூபாய் நிதியாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

பதிப்பாளர்களின் நெடுநாள் கோரிக்கையான நிரந்தர புத்தக பூங்கா அமைப்பதற்கான ஒப்புதலையும் தமிழக அரசு வழங்கி இருக்கிறது.

மொழி பெயர்ப்பு திட்டம்

தமிழ்நூல்கள் நாட்டுடமை, எழுத்தாளர்கள் பிறந்தநாளில் கூட்டங்கள், குறைந்த விலையில் சங்க இலக்கிய நூல்கள் வெளியீடு, திராவிடக் களஞ்சியம் உருவாக்கம், இதழியலாளருக்கு கலைஞர் எழுதுகோல் விருது, உலக பல்கலைக்கழகங்களில் செம்மொழித் தமிழ் இருக்கைகள், நூலகங்களுக்கு சிற்றிதழ்கள், இலக்கியமாமணி விருதுகள், உயரிய விருது பெற்ற எழுத்தாளர்களுக்கு கனவு இல்லம், திசை தோறும் திராவிடம், முத்தமிழறிஞர் மொழிபெயர்ப்புத் திட்டம் என ஏராளமான தமிழ் காப்பு திட்டங்களை தி.மு.க. அரசு செயல்படுத்தி வருகிறது.

சங்க இலக்கிய நூல்களை செம்பதிப்பாக கொண்டு வர இருக்கிறோம். அதற்கான பணிகள் நடந்து வருகின்றன. பிறமொழியில் இருந்து தமிழுக்கும் பல்வேறு நூல்கள் கொண்டு வரப்பட இருக்கின்றன.

வாசிக்க வேண்டும்

உலகில் எந்த மொழிக்கும் இல்லாத பழமை சிறப்பும், இலக்கிய இலக்கண வளமையும் தமிழ் மொழிக்கு உண்டு. இந்த தமிழ்மொழிதான் தமிழ் இனத்தைக் காக்கும் காப்பரணாக அமைந்திருக்கிறது.

எத்தகைய படையெடுப்புகள் வந்தாலும் அத்தனை படையெடுப்புகளையும் தாங்கி நிற்கும் வல்லமை நம்முடைய தமிழ்மொழிக்கு உண்டு.

பட்டங்கள் வாங்குவதற்காக மட்டுமல்லாமல், அறிவின் கூர்மைக்காக, நம்முடைய சிந்தனையை வளர்த்து கொள்வதற்காக, நாம் கடந்து வந்த பாதையை அறிந்துகொள்வதற்காக, நாம் போக வேண்டிய திசையை சென்றடைவதற்காக, அறிவார்ந்த புத்தகங்களை அனைவரும் வாசிக்க வேண்டும்.

அறிவுப்புரட்சி மாநிலம்

ஒரு செய்தி உங்களை வந்தடைகிறது என்றால், அதனை உடனே முழுமையாக நம்பிவிடாதீர்கள். அதன் உண்மைத்தன்மையை ஆராயுங்கள். எது உண்மை என்று அறிய வேண்டும் என்றால் நிறைய படிக்க வேண்டும்.

இட்டுக்கட்டிக் கட்டுக்கதைகளை அவிழ்த்துவிடுபவர்கள் அந்த கலையில் தேர்ந்தவர்கள். ஆண்டாண்டு காலமாக கட்டுக்கதைகளை நம்ப வைக்கும் திறனைப் பெற்றவர்கள்.

தமிழ்ச்சமூகம் பகுத்தறிவுச் சமூகம் பொய்களையும் கட்டுக்கதைகளையும் வென்ற சமூகம். தமிழகம் அறிவுப் புரட்சி மாநிலமாக பகுத்தறிவுப் புரட்சி மாநிலமாக மாறுவதற்கு இதுபோன்ற புத்தக திருவிழாக்கள் அனைத்து நகரங்களிலும் நடைபெற வேண்டும். அறிவே அனைத்துக்கும் அரண். புத்தகங்களே புத்துணர்வு அமுதம்.

இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் அமைச்சர் முத்துசாமி, திருமகன் ஈவெரா எம்.எல்.ஏ., ஈரோடு மேயர் நாகரத்தினம் சுப்பிரமணியம், துணை மேயர் செல்வராஜ், கலெக்டர் கிருஷ்ணனுண்ணி, மக்கள் சிந்தனை பேரவை தலைவர் ஸ்டாலின் குணசேகரன், செயலாளர் அன்பரசு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்