தமிழக அரசு போக்குவரத்து தொழிலாளர்களை வஞ்சித்து விட்டது
தமிழக அரசு போக்குவரத்து தொழிலாளர்களை வஞ்சித்து விட்டது என ராஜேந்திர பாலாஜி கூறினார்.
விருதுநகரில் போக்குவரத்து கழக பணிமனை முன்பு அண்ணா தொழிற்சங்கத்தின் சார்பில் போக்குவரத்து தொழிலாளர் ஊழியர் ஊதிய ஒப்பந்த முடிவுகளுக்கு கண்டனம் தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- போக்குவரத்து தொழிலாளர்களின் ஊதிய ஒப்பந்த பேச்சு வார்த்தை மூலம் போக்குவரத்து தொழிலாளர்களை வஞ்சித்து விட்டது. 3 ஆண்டுக்கு ஒரு முறை ஒப்பந்தம் என்பதை 4 ஆண்டுக்கு ஒருமுறை என மாற்றியுள்ளது. 27 சதவீத உயர்வு கேட்ட போக்குவரத்து தொழிலாளர்களுக்கு 5 சதவீதம் உயர்வு அளித்துள்ளது. 30 ஆண்டுகள் பணியாற்றிய போக்குவரத்து தொழிலாளர்கள் பணி ஓய்வு பெற்று வெறுங்கையுடன் வீட்டிற்கு செல்ல வேண்டிய பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது. போக்குவரத்து தொழிலாளர் நலனில் அக்கறை கொண்ட அ.தி.மு.க. ஆட்சி விரைவில் மலர்வது உறுதி. இவ்வாறு அவர் கூறினார்.
இதில் அண்ணா தொழிற்சங்க மாநிலச்செயலாளர் கமலக்கண்ணன், மண்டல நிர்வாகிகள் உமாபதி, குரு சந்திரன், முத்தியால் ராஜ், மேற்கு மாவட்ட அ.தி.மு.க. அவை தலைவர் விஜயகுமாரன், ஸ்ரீவில்லிபுத்தூர் எம்.எல்.ஏ. மான்ராஜ், முன்னாள் எம்.எல்.ஏ. ராஜவர்மன், விருதுநகர் நகர செயலாளர் முகமது நயினார், ஒன்றிய செயலாளர்கள் தர்மலிங்கம், மச்ச ராஜா, கே.கே. கண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.