பிற மாநில தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டிய பொறுப்பு தமிழக அரசுக்கு உண்டு - ஓ.பன்னீர்செல்வம்

பிற மாநில தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டிய பொறுப்பு தமிழக அரசுக்கு உண்டு என்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

Update: 2023-03-05 09:10 GMT

சென்னை,

அனைவரையும் சமமாக பாவித்து, பிற மாநிலத் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு வழங்குவதையும், அவர்களுடைய பணியை முறைப்படுத்துவதையும், தமிழ்நாட்டில் உள்ள இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைப்பதையும் உறுதி செய்ய வேண்டிய பொறுப்பும், கடமையும் தமிழ்நாடு அரசிற்கு உண்டு என்று முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றிய தமிழ்க்குடிதான் நாகரிகத்தை உலகிற்கு தந்து, வணிகம் மூலம் கடல் தாண்டிச் சென்று வரலாறு படைத்தது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே "யாதும் ஊரே யாவரும் கேளிர்" என்னும் கொள்கையை உலகம் முழுவதும் பரப்பிய பெருமைக்குரியவர் கணியன் பூங்குன்றனார். இதன் அடிப்படையில், "காக்கை குருவி எங்கள் சாதி - நீள் கடலும் மலையும் எங்கள் கூட்டம்" என்று பாடினார் மகாகவி பாரதியார். இதுபோன்ற பொன்மொழிதான் உலக அரங்கில் யாவரும் பின்பற்றும் ஏற்றமிக்க கண்ணொளியாய் திகழ்ந்து வருகிறது.

"தமிழர்களாகிய நாங்கள் எந்த மொழியையும் மதிக்கிறோம். உலகில் எந்தக் கோடியில் அறிவு இருந்தாலும், அதை ஏற்றுக் கொள்கிறோம். உலகின் எந்தக் கோடியில் இருந்து வருபவராயினும் அவர்கள் அறிவை மதிக்கிறோம்" என்றார் போறிஞர் அண்ணா. இதற்கேற்ப, தமிழ் மொழியையும், பிற மொழிகளையும் இரு கண்களாகப் போற்றி பாதுகாத்துக் கொண்டிருப்பவர்கள் தமிழர்கள். "தமிழனின் பண்பு யாருக்கும் தாழ்ந்தவனாக இருப்பதல்ல. யாரையும் தாழ்த்துவதும் அல்ல" என்ற பொன்மொழிக்கேற்ப அனைவரையும் சமமாக நடத்தும் பண்பு கொண்டவர்கள் தமிழர்கள். தலைசிறந்த பண்புகளில் ஒன்றான விருந்தோம்பலுக்கு எடுத்துக்காட்டாக விளங்குபவர்கள் தமிழர்கள் என்றால் அது மிகையாகாது.

இப்படிப்பட்ட தலைசிறந்த பண்புகளைக் கொண்ட தமிழ்நாட்டில் பிற மாநிலத் தொழிலாளர்கள் காலம் காலமாக பல்வேறு பணிகளில், குறிப்பாக தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு, தமிழ்நாட்டின் மேம்பாட்டிற்கு, தமிழ்நாட்டின் கட்டமைப்பிற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்தத் தொழிலாளர்களுக்கு தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை, அவர்கள் விரட்டி அடிக்கப்படுகிறார்கள் என்ற செய்தி சமூக வலைதளங்களில் வைரலாக பரவியிருப்பது வருத்தமளிக்கும் செய்தியாகும். இந்தச் செய்தி உண்மைக்கு மாறானது என்று அரசு தரப்பில் அறிவித்திருப்பது ஆறுதல். தலைசிறந்த பண்புகளைக் கொண்ட தமிழர்கள் மீது அவதூறு பரப்புவது என்பது கடும் கண்டனத்திற்குரியது. வதந்தி பரப்புவோரை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க வேண்டும். இதுபோன்ற வதந்திகள் தமிழ்நாட்டின் தொழில் அமைதிக்கும், பொருளாதார வளர்ச்சிக்கும், சட்டம்-ஒழுங்கு சீரழிவிற்கும் வழிவகுக்கும் என்பதில் யாருக்கும் எவ்வித மாறுபட்ட கருத்தும் இருக்க முடியாது.

பிற மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு அளிக்கப்படுவதை உறுதி செய்யும் அதே நேரத்தில், தமிழ்நாட்டிலுள்ள நிறுவனங்களில் தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பினை அளிக்கவும் தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்தத் தருணத்தில், "தமிழகத்தில் உள்ள தொழில் நிறுவனங்களில் 75 விழுக்காடு வேலை வாய்ப்புகள் தமிழர்களுக்கே வழங்க சட்டம் கொண்டு வரப்படும்" என்ற தி.மு.க.வின் தேர்தல் வாக்குறுதியினை அரசின் கவனத்திற்கு கொண்டு வருவது எனது கடமையென கருதுகிறேன்.

உழைப்பின் உயர்வை மேன்மைப்படுத்தியவர் எம்.ஜி.ஆர். எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும் என்ற குறிக்கோளுடன் தன் வாழ்நாளை அர்ப்பணித்தவர் ஜெயலலிதா. மறைந்த தலைவர்கள் வகுத்துக் கொடுத்த இலட்சியப் பாதையில், அனைவரையும் சமமாக பாவித்து, பிற மாநிலத் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு வழங்குவதையும், அவர்களுடைய பணியை முறைப்படுத்துவதையும், தமிழ்நாட்டில் உள்ள இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைப்பதையும் உறுதி செய்ய வேண்டிய பொறுப்பும், கடமையும் தமிழ்நாடு அரசிற்கு உண்டு.

தமிழ்நாட்டின் வளர்ச்சியையும், தமிழக மக்களின் வளர்ச்சியையும், தொழில் அமைதி மற்றும் சட்டம்-ஒழுங்கு பேணிக் காக்கப்படுவதையும் கருத்தில் கொண்டு, பிற மாநிலத் தொழிலாளர்களின் பாதுகாப்பினையும், தமிழ்நாட்டு மக்களுக்கு வேலைவாய்ப்பினை பெற்றுத் தருவதையும், வதந்திகள் பரப்பியோரை சட்டத்தின் முன் நிறுத்தி உரிய தண்டனை பெற்றுத் தருவதையும் தி.மு.க. அரசு உறுதி செய்ய வேண்டுமென்று அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்