என்ஜினீயரிங் கல்லூரிகளில் 30 ஆயிரம் இடங்கள் நிரம்பின; 3-வது சுற்று தொடங்கியது

2 சுற்றுகள் கலந்தாய்வு நிறைவு பெற்ற நிலையில், இதுவரை என்ஜினீயரிங் கல்லூரிகளில் 30 ஆயிரத்து 287 இடங்கள் நிரம்பி இருக்கின்றன. 3-வது சுற்று கலந்தாய்வு தொடங்கியிருக்கிறது.;

Update: 2022-10-13 23:40 GMT

என்ஜினீயரிங் கலந்தாய்வு

தமிழகம் முழுவதும் உள்ள 446 என்ஜினீயரிங் கல்லூரிகளில் காலியாக இருக்கும்1 லட்சத்து 57 ஆயிரம் இடங்களில் மாணவ-மாணவிகளை சேர்ப்பதற்கு ஆன்லைன் கலந்தாய்வை, தொழில்நுட்ப கல்வி இயக்ககம் நடத்தி வருகிறது. மொத்தம் 4 சுற்றுகளாக இந்த கலந்தாய்வு நடக்கிறது.

இதில் முதல் சுற்று கலந்தாய்வு கடந்த மாதம் (செப்டம்பர்) 10-ந்தேதி தொடங்கியது. ஒவ்வொரு சுற்று கலந்தாய்விலும் விருப்ப இடங்களை தேர்வு செய்தல், ஒதுக்கீடு செய்தல், அதை உறுதி செய்து இறுதி ஒதுக்கீட்டு ஆணை பெறுதல், கல்லூரிகளில் சேருதல், காத்திருத்தல் என்ற நடைமுறைகள் பின்பற்றப்படுகின்றன.

அதன்படி, ஒரு சுற்று கலந்தாய்வு நிறைவு பெறுவதற்கு, 2 வாரங்கள் வரை ஆகிறது. முதல் சுற்று கலந்தாய்வை பொறுத்தவரையில் கடந்த மாதம் 25-ந்தேதியுடன் நிறைவு பெற்றது. இந்த கலந்தாய்வு மூலம் 10 ஆயிரத்து 340 மாணவ-மாணவிகள் என்ஜினீயரிங் கல்லூரிகளில் தங்கள் விருப்ப இடங்களில் சேர்ந்தனர்.

30 ஆயிரம் இடங்கள் நிரம்பின

அதன் தொடர்ச்சியாக 2-ம் சுற்று கலந்தாய்வு கடந்த மாதம் 25-ந்தேதி தொடங்கியது. இந்த கலந்தாய்வு நேற்று காலையுடன் நிறைவு பெற்றது. இதில் 31 ஆயிரம் மாணவ-மாணவிகள் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டு, இதில் 18 ஆயிரத்து 521 பேர் விருப்ப இடங்களை தேர்வு செய்தனர்.

அவர்களில் 13 ஆயிரத்து 197 மாணவ-மாணவிகள் கல்லூரிகளில் சேர்ந்து இருக்கின்றனர். இதேபோல், அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டு அடிப்படையிலான 2-வது சுற்று கலந்தாய்வில், 1,426 பேர் விருப்ப இடங்களை தேர்வு செய்த நிலையில், 1,207 பேர் உறுதி செய்து கல்லூரிகளில் சேர்ந்துள்ளனர்.

ஆக மொத்தம் 2-வது சுற்று கலந்தாய்வில், 14 ஆயிரத்து 404 மாணவ-மாணவிகள் கல்லூரிகள் சேர்ந்து இருப்பதாகவும், 5 ஆயிரத்து 543 பேர் இடங்களை உறுதி செய்து, முதன்மை விருப்ப இடங்களுக்காக காத்திருப்பதாகவும் தமிழ்நாடு என்ஜினீயரிங் மாணவர் சேர்க்கைக்குழு தெரிவித்துள்ளது. இதுவரை நடந்து முடிந்த 2 சுற்றுகள் கலந்தாய்வு முடிவில், மொத்தம் 30 ஆயிரத்து 287 இடங்கள் நிரம்பி இருக்கின்றன.

3-வது சுற்று தொடங்கியது

இதனைத்தொடர்ந்து, என்ஜினீயரிங் 3-வது சுற்று கலந்தாய்வு நேற்று முதல் தொடங்கியுள்ளது. மொத்தம் 49 ஆயிரத்து 42 பேர் கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டு இருக்கின்றனர். இவர்கள் நாளை (சனிக்கிழமை) வரை விருப்ப இடங்களை தேர்வு செய்ய அவகாசம் வழங்கப்பட்டு இருக்கிறது.

Tags:    

மேலும் செய்திகள்