தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளிநாடு பயணம்

தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அடுத்த மாத இறுதியில் வெளிநாடு செல்கிறார்.;

Update:2023-04-24 05:23 IST

தமிழகத்தில் 2021-ம் ஆண்டு மே மாதம் தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்ற நிலையில், தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது.

துபாய் பயணம்

அந்த வகையில், கடந்த ஆண்டு மார்ச் மாதம் 24-ந் தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், 4 நாள் பயணமாக துபாய் சென்றார்.

அப்போது, அங்கு நடைபெற்ற 'துபாய் எக்ஸ்போ' சர்வதேச தொழில் கண்காட்சியில் பங்கேற்று தமிழக அரங்கத்தை திறந்துவைத்தார்.

மேலும், பல்வேறு தொழில் அதிபர்களை சந்தித்து, தமிழ்நாட்டில் தொழில் தொடங்க வருமாறு அழைப்பு விடுத்தார். 2 நாட்களாக அங்கு நடைபெற்ற நிகழ்ச்சிகளிலும் அவர் கலந்துகொண்டார்.

புரிந்துணர்வு ஒப்பந்தம்

அதன் பின்னர் அபுதாபி பயணம் மேற்கொண்ட முதல்-அமைச்சர், அங்குள்ள தொழில் அதிபர்களை சந்தித்து ரூ.2,600 கோடிக்கான முதலீடுகளை தமிழ்நாட்டுக்கு கொண்டுவர புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன. இதன் மூலம் 9,700 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்க இருக்கிறது.

தற்போது, தி.மு.க. ஆட்சிக்கு வந்து 2 ஆண்டு கள் நிறைவடைந்து, அடுத்த மாதம் (மே) 7-ந் தேதி 3-வது ஆண்டில் அடியெடுத்து வைக்க இருக்கிறது.

இந்த நிலையில், மேலும் பல வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்த மு.க.ஸ்டாலின் முடிவு செய்துள்ளார்.

வெளிநாடு பயணம்

அதன்படி மீண்டும் வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொண்டு, தமிழ்நாட்டுக்கு தொழில் முதலீடுகளை ஈர்க்க அவர் திட்டமிட்டு உள்ளார். முதலில் அடுத்த மாதம் (மே) 23-ந் தேதி லண்டன் செல்ல முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முடிவு செய்திருப்பதாக தெரிகிறது.

அங்கிருந்து ஜப்பான், சிங்கப்பூர், டென்மார்க் உள்ளிட்ட நாடுகளுக்கும் அவர் செல்ல திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினின் வெளிநாட்டு சுற்றுப்பயண விவரம் விரிவாக தயாரிக்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, தமிழக தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு டென்மார்க் சென்றுள்ளார். அங்குள்ள தொழில் முதலீடு வாய்ப்பு குறித்து, அந்நாட்டு அதிகாரிகளுடன் அவர் ஆலோசனை நடத்தி வருகிறார்.

பேச்சுவார்த்தை

இதேபோல், தொழில் துறை அதிகாரிகளும் லண்டன், ஜப்பான், சிங்கப்பூரில் உள்ள 20-க்கும் மேற்பட்ட தொழில் நிறுவன அதிகாரிகளுடன் இப்போதே பேச்சுவார்த்தை நடத்த தொடங்கி இருக்கின்றனர்.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அங்கு பயணம் மேற்கொள்ளும்போது, நேரடியாக புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் வகையில் முன்னெடுத்து செல்லவும் ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

Tags:    

மேலும் செய்திகள்