மாதிரி வாக்குச்சாவடி மையத்தை தாசில்தார் ஆய்வு
கம்பம் அரசு கள்ளர் மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள மாதிரி வாக்குச்சாவடி மையத்தை தாசில்தார் ஆய்வு செய்தார்.
நாடாளுமன்ற தேர்தல் விரைவில் நடைபெற இருப்பதை முன்னிட்டு, இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தலின் பேரில் மாதிரி வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டு பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. தேனி மாவட்டத்திலும் அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் விழிப்புணர்வு ஏற்படுத்த மாவட்ட கலெக்டர் ஷஜீவனா உத்தரவிட்டார். அதன்படி, கம்பம் அரசு கள்ளர் மேல்நிலைப்பள்ளியில் அமைய உள்ள வாக்குச்சாவடி மையம் மாதிரி வாக்குச்சாவடி மையமாக தேர்வு செய்யப்பட்டது.
இதையடுத்து வாக்களிப்பதின் அவசியம், அதன் முக்கியத்துவம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் உத்தமபாளையம் தாசில்தார் சந்திரசேகரன் கலந்துகொண்டு மாதிரி வாக்குச்சாவடி மையத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் கம்பம் நகராட்சி தேர்தல் உதவியாளர் சசிக்குமார் வாக்களிப்பதன் அவசியம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இதையடுத்து எவ்வாறு வாக்களிக்க வேண்டும் என்பது குறித்து பள்ளி மாணவ, மாணவிகள், அவர்களின் பெற்றோர் மற்றும் பொதுமக்களுக்கு செயல் விளக்கம் செய்து காண்பித்தனர்.