15 போலீஸ் அதிகாரிகளுக்கு 'டேப்லெட்'
15 போலீஸ் அதிகாரிகளுக்கு 'டேப்லெட்' வழங்கினார், போலீஸ் சூப்பிரண்டு ராஜேஸ்கண்ணன்
நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக ராஜேஸ்கண்ணன் சமீபத்தில் பதவியேற்றார். அவர் காவல்துறையை நவீனப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். ஒவ்வொரு போலீஸ் நிலையத்திலும், போலீசாருக்கு வழங்கப்படும் பணிகள், வழக்குப்பதிவேடுகள், குற்ற நடவடிக்கைகள், முக்கிய சம்பவங்கள் போன்ற பல்வேறு நிகழ்வுகள் பதிவு செய்யப்படுகின்றன. இவை சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. இதில் ஏற்படும் கால தாமதத்தை தவிர்த்து உடனுக்குடன் தகவல்கள் சம்பந்தப்பட்ட அலுவலரை சென்றடையும் வகையிலும், போலீசாரின் தொடர் நடவடிக்கைகளை கண்டறியும் வகையிலும், போலீசாருக்கு நவீன 5-ஜி இன்டர்நெட் தொழில்நுட்ப வசதியுடன் கூடிய கையடக்க கணினி (டேப்லெட்) வழங்கப்பட உள்ளன.
நாமக்கல் மாவட்டத்தில் முதல் கட்டமாக 5 போலீஸ் நிலையங்களில் பணியாற்றும் தலா ஒரு இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் நிலைய எழுத்தர் உள்ளிட்ட 3 பேருக்கு டேப்லெட் கம்ப்யூட்டர் வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட போலீஸ் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஸ்கண்ணன் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு போலீஸ் அதிகாரிகளுக்கு டேப்லெட்களை வழங்கினார். அப்போது, முதற்கட்டமாக நாமக்கல், ராசிபுரம், திருச்செங்கோடு, பள்ளிபாளையம், குமாரபாளையம் ஆகிய 5 போலீஸ் நிலையங்களுக்கு நவீன தொழில்நுட்ப வசதியுடன் கூடிய டேப்லெட் வழங்கப்பட்டு உள்ளது. விரைவில் அனைத்து போலீஸ் நிலையங்களுக்கும் வழங்கப்படும். போலீஸ் அதிகாரிகள் இவற்றை முறையாக பயன்படுத்தி அலுவல்களை டேப்லெட் மூலம் பதிவு செய்து, அப்டேட் செய்ய வேண்டும் என்று கூறினார். இந்த நிகழ்ச்சியில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ராஜூ மற்றும் போலீஸ் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.